×

ஆற்றில் நீராட பொதுமக்களுக்கு தடை ஆடிப்பெருக்கில் காவிரி, பவானி ஆற்றங்கரைகள் வெறிச்: கொரோனா ஊரடங்கால் மக்கள் ஏமாற்றம்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் ஆற்றில் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஆடிப்பெருக்கன்று எப்போதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் காவிரி, பவானி ஆற்றின் கரைகள் நேற்று வெறிச்சோடி காணப்பட்டன. ஆடி மாதம் 18ம் தேதியை ஆடிப்பெருக்கு விழாவாக தமிழக மக்களால் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆடிப்பெருக்கன்று புனித  நதிகளில் நீராடி, முளைப்பாரி விட்டு வழிபட்டால் விவசாயம் செழிக்கும்.  குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும் என்பது ஐதீகம். அதேபோல், புதுமண தம்பதிகள் ஆடிப்பெருக்கன்று நதிகளில் நீராடி, திருமண மாலைகளை ஆற்றில்விட்டு, புதிய தாலி சரடினை கட்டிக் கொண்டால், மண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் காவிரி ஆறு, பவானி ஆற்றன் கரைகளில் ஆடிப்பெருக்கு தினத்தன்று ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்கள்  நீராடி, நதியை வணங்கி சிறப்பாக கொண்டாடுவர். ஆனால், இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவும், முழு ஊரடங்கு காரணமாகவும் ஆறுகளில்  நீராட மக்களுக்கு நேற்று தடை விதிக்கப்பட்டது. இதனால், ஆடிப்பெருக்கு விழா  அன்று எப்போதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் ஈரோடு காவிரி ஆற்றங்கரை,  பவானி கூடுதுறை போன்ற பகுதிகள் நேற்று வெறிச்சோடி காணப்பட்டன.

மக்கள் ஏமாற்றம்  
மக்கள்  ஆற்றங்கரையில் நீராட தடை என பவானி, காவிரி ஆற்றங்கரை நுழைவு வாயிலில்  மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு செய்துள்ளனர். இதனை அறியாமல் நேற்று  காலை ஏராளமான பொதுமக்கள் காவிரி, பவானி ஆற்றில் நீராட வந்தனர்.  அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து  நிறுத்தி திருப்பி அனுப்பினர். இதனால், ஆடிப்பெருக்கன்று நீராட முடியாமல்  மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும், ஒரு சிலர் காலிங்கராயன் வாய்க்காலில் நீராடி சென்றனர்.



Tags : Cauvery ,riverbanks ,Bhavani ,Corona , Adiperukku, Cauvery, Bhavani riverbanks, corona, curve, people
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 68 கனஅடி