×

மனநலம் பாதிக்கப்பட்டு பொது இடங்களில் சுற்றுபவர்களை கண்டறிந்து அரசு காப்பகத்தில் சேர்க்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் ஆணை..!!

சென்னை: தமிழகம் முழுவதும் பொதுஇடங்களில் சுற்றித்திரியும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தை சேர்ந்த வழக்கறிஞர் கற்பகம் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றினை தொடர்ந்திருந்தார். அதில் கொரோனா காலத்தில் பேருந்து நிலையங்கள், தெருவோரங்கள் உள்ளிட்ட பல்வேறு பொதுஇடங்களில் மனநலம் பாதிக்கப்பட்டு பலர் சுற்றித்திரிவதாகவும், இதில் பலருக்கு கொரோனா தொற்று இருப்பதினால் அவர்களை தொற்றில் இருந்து விடுபட செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

அதுமட்டுமின்றி அவர்களுக்கு போதுமான உணவு, இருப்பிடம் உள்ளிட்ட வசதிகளை செய்துதர அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஹேமலதா, எம்.எம். சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், இதுதொடர்பான செய்தி தினகரன் நாளிதழில் வெளியானதை சுட்டிக்காட்டினார். குறிப்பாக பழனி மலையை சுற்றி பல்வேறு மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் சுற்றித்திரிவதாகவும், ஒருசிலருக்கு கொரோனா இருப்பதாகவும் செய்தி வெளியிடப்பட்டதாக சுட்டிக்காட்டினார்.

இதையடுத்து நீதிபதிகள், இது சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான ஆணையர் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு அதிகாரியை நியமித்து பொதுஇடங்களில் சுற்றித்திரியும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கண்டுபிடித்து அவர்களை முகாம்களுக்கு அனுப்பி உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இது தொடர்பாக என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது, எத்தனை பேர் மீட்கப்பட்டனர் உள்ளிட்ட விவரங்களை அறிக்கையாக வருகின்ற 19ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளார்கள்.

Tags : places ,Mental health sufferers ,persons ,Government of Tamil Nadu ,iCourt ,government , Tn government, mentally ill persons ,
× RELATED தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு ஓரிரு...