×

கொரோனாவால் மனிதர்களுக்கு மட்டுமா பாதிப்பு? பட்டினியில் வாடும் வளர்ப்பு யானைகள்: கேரளா போல தமிழக அரசும் நிதி ஒதுக்குமா?

மதுரை: கொரோனா மனிதர்களை மட்டுமல்ல, யானைகளையும் பாதித்துள்ளது. போதிய உணவு கிடைக்காமல் நெருக்கடியை சந்திப்பதாகவும், கேரளாவை போல், தமிழக அரசும் யானைகளை பராமரிக்க நிதியுதவி வழங்கவேண்டும் என்றும்  யானை வளர்க்கும் உரிமையாளர் கோரிக்கை விடுத்துள்ளார். மதுரை, தல்லாகுளம் பகுதியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு துரைச்சாமி என்பவர், வீட்டில் சொந்தமாக 6 யானைகளை வளர்த்து வந்துள்ளார். இவருடைய மகன் ராஜாராம், அழகர்கோயிலில் யானை பாகனாக இருந்து, அவரும் வீட்டில் யானைகளை வளர்த்து வந்துள்ளார். தற்போது, இவருடைய மகன் ரங்கன் (60) சொந்தமாக லட்சுமி (42), குஷ்மா (42) என்ற 2 பெண் யானைகளை வளர்த்து வருகிறார்.

ரங்கனின் குடும்பத்தினர் மூன்று தலைமுறைகளாக, யானைகளை வீட்டில் வளர்த்து வருகின்றனர். யானைகளை முன்பு தல்லாகுளம் பகுதியில் வளர்த்து வந்த நிலையில், அங்கு போதிய இடவசதி இல்லாததால், யானைகளுக்காகவே அங்கிருந்து இடத்தை மாற்றி, மதுரை புறநகர் பகுதியான  கடச்சனேந்தலில் தனி இடம் வாங்கி ஷெட் அமைத்து, அங்கு யானைகளை வளர்த்து வருகிறார். இந்த இரு யானைகளும், ரங்கன் கண்காணிப்பில் மட்டும் கிட்டத்தட்ட 35 வருடங்களாக வளர்கிறது. கொரோனா இல்லாத காலங்களில் இவ்விரு யானைகளையும் கோயில் திருவிழாக்கள், திருமண நிகழ்வுகள், மாப்பிள்ளை அழைப்பு, அரசு விழாக்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு அனுப்பி வைத்துள்ளார். அதன் மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு யானைகளை பராமரித்து வந்துள்ளார்.

தமிழகத்தில் சில மாவட்டங்களில் முக்கிய கோயில்களில் யானைகள் இல்லாததால் அங்கு நடைபெறும் கும்பாபிஷேகம் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிக்காக இந்த யானைகள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளது. இந்த யானைகள் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், திருச்சி, தூத்துக்குடி, சிவகங்கை உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களில் நடைபெறும் கோயில் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளன. தற்போது கொரோனாவால் கடந்த 4 மாதங்களாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது போல், யானை உரிமையாளரான ரங்கனும் கடுமையாக பாதிப்படைந்துள்ளார். அந்த பாதிப்பு தற்போது யானைகளையும் கடுமையாக பாதித்துள்ளது.

யானை உரிமையாளர் ரங்கன் கூறுகையில், ‘‘தற்போது கோயில்கள் அனைத்தும் அடைக்கப்பட்டிருப்பதோடு, பொது நிகழ்ச்சிகள் மற்றும் திருவிழாக்களுக்கு தடை உள்ள நிலையில், யானைகளுக்கு உணவு வழங்குவதற்கே சிரமம் ஏற்பட்டுள்ளது. யானைகளுக்கு ஒரு வாரத்திற்கான சோள நாத்துக்கட்டு மட்டும் ரூ.15 ஆயிரத்திற்கு வாங்க வேண்டும். அரிசி சாப்பாடு தினமும் 5 கிலோ அளவிலும், சோளம், கொள்ளு, கோதுமை, பாசிப்பயறு என தினமும் ரூ.7 ஆயிரம் வரை செலவு ஆகும்.

இவற்றுடன் சேர்த்து மருத்துவச் செலவும் சேர்ந்தால், மாதத்திற்கு ரூ.1 லட்சம் வரை செலவாகும், கேரள அரசு கொரோனாவுக்காக யானைகளுக்கு என ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதில் வாரந்தோறும் அரிசி, பருப்பு, கோதுமை, தட்டை என  உணவுப்பொருட்கள் அரசு சார்பில் வழங்கப்படுகிறது. அதுபோல் தமிழக அரசும் வழங்க வேண்டும்’’ என்றார்.

Tags : government ,Kerala ,Tamil Nadu , Corona, Humans, Elephants, Government of Kerala, Tamil Nadu
× RELATED முல்லைப் பெரியாறு: கேரள அரசு கட்டும்...