×

ஆடி 18ம் பெருக்கு விழா: கொரோனா’ தடையால் எளிய முறையில் நடந்த சிறப்பு வழிபாடு: நீர்நிலைகளில் போலீஸ் கண்காணிப்பு

நெல்லை: ஆடி மாதம் 18ம் தேதி ஆடிபெருக்கு’ வைபவம் கொண்டாடப்படுவது வழக்கம். சுமங்கலி பெண்கள் கணவரின் நீண்ட ஆயுளுக்காகவும் புதியதாக திருமணமான தம்பதிகள் மற்றும் கன்னி பெண்கள் தங்களுக்கு நல்ல வரண் அமைய வேண்டியும்  நீர் நிலைகளுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம். கொரோனா தொற்று பரவல் காரணமாக நேற்று (ஞாயிறு) தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் போலீசார் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து உள்ளனர். இதன்படி ஆடி பெருக்கு பூஜைக்காக பெண்கள் அதிக அளவில் கூடும் நெல்லை குறுக்குதுறை சுப்பிரமணியசாமி கோவில் படித்துறை மற்றும் கோவில் நுழைவுபகுதி உள்ளிட்ட இடங்களில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

ஆடி பெருக்கு பூஜைக்காக பாளை குலவணிகர்புரம், வண்ணார்பேட்டை மற்றும் சி.என். கிராமம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுமங்கலி பெண்கள் மற்றும் புதிதாக திருமணம் செய்த தம்பதிகள், மங்கல பொருட்களுடன் அதிகாலை தாமிரபரணி ஆற்றங்கரையில் திரண்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, பூஜைகளை 10 நிமிடம் மட்டுமே நடத்தி முடிக்க வேண்டும் எனக்கூறி அனுமதி அளித்தனர். இதனால் சுமங்கலி பூஜையை சுருக்கமாக முடித்துக் கொண்டு தங்கள் வீடுகளுக்கு திரும்பினர். இதுகுறித்து ஆற்றங்கரையில் சுமங்கலி பூஜை நடத்த வந்த பெண்கள் கூறுகையில், ‘வழக்கமாக நீண்டநேரம் இங்கு அமர்ந்து சுமங்கலி பூஜை நடத்துவோம்.

தற்போது ஆற்றிலும் தண்ணீர் வரத்து அதிக அளவில் இல்லை. கொரோனா தடை காரணமாக கோவிலுக்குள் சென்று வழிபடவும் அனுமதி இல்லை. இதனால் வழக்கமான பூஜைகளை குறைந்த நேரத்தில் நடத்தி வழிபாடு செய்தோம். பிற சம்பிரதாய சடங்குகளை வீட்டில் நடத்துவோம். இதுபோல் சித்ரான்னங்களை கொண்டு வந்து ஆற்றங்கரையில் வைத்து உண்போம். தடை காரணமாக வீட்டில் வைத்து உண்ணும் நிலை உள்ளது. சுமங்கலி பூஜை மட்டுமின்றி உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனாவை விரட்டவும் வேண்டி வழிபாடு செய்தோம்’’ என்றனர். திருச்செந்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள், ஆடி பதினெட்டாம் பெருக்கு அன்று 18 வகையான அன்னங்களை வீட்டில் தயார் செய்து கடற்கரைக்கு கொண்டு வருவர். பின்னர் அவற்றை குடும்பத்துடன் அமர்ந்து அனைவரும் உண்டு மகிழ்வர்.

சிறுவர், சிறுமிகள் கடற்கரையில் விளையாடுவர். இதேபோல் புதுமண தம்பதிகளும் ஆடிப்பெருக்கு அன்று திருச்செந்தூர் கடற்கரைக்கு வரத்தவறமாட்டார்கள். ஆனால் நேற்று ஊரடங்கால் திருச்செந்தூர் கடற்கரை பகுதி முழுவதும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. தடையை மீறுவோரை கண்காணிக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனால் வீடுகளிலேயே பெண்கள் ஆடிப்பெருக்கை கொண்டாடி அம்மனை வழிபட்டனர்.

Tags : Audi 18th Flood Festival: Special Worship in Simple Way ,Corona , Audi 18th Flood Festival, Corona, Waters, Police
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...