கொரோனாவை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன: தென்மாவட்டங்களில் 6, 7-ம் தேதிகளில் முதல்வர் பழனிசாமி ஆய்வு..!!!

சென்னை: கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட 6-ம் கட்ட (31ம் தேதி) ஊரடங்கு முடிவடைந்த நிலையில், ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும், 31.8.2020 (ஆகஸ்ட்  31ம் தேதி) நள்ளிரவு 12 மணி வரை தமிழ்நாடு முழுவதும் மேலும் நீட்டிப்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும், ஆகஸ்ட் மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் எவ்வித தளர்வுகளும் இன்றி, தமிழகத்தில்  முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், கொரோனா பாதிப்பில் தமிழகம் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் இதுவரை 2,57,613 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 4132 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1,96,483 பேர் குணமடைந்துள்ளனர்.  தற்போது வரை 56,998 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே, கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால், தென்மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகளவில்  உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய முதல்வர் எடப்பாடி பழனிசாமி 2 நாள் பயணமாக தென்மாவட்டங்களுக்கு செல்லவுள்ளார். வரும் 6-ம் தேதி (வியாழன்கிழமை) மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் முதல்வர்  பழனிசாமி நேரில் ஆய்வு செய்யவுள்ளார். தொடர்ந்து, 7-ம் தேதி (வெள்ளிகிழமை) திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் நேரில் ஆய்வு மேற்கொள்கிறார். ஆய்வு கூட்டத்தின்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட  ஆட்சியர்களிடம் கேட்டறிய உள்ளார். கொரோனா அதிகம் பரவும் தென்மாவட்டங்களில் முதல்வர் நேரில் சென்று ஆய்வு செய்யவுள்ளது பெரிதும் முக்கியதுவமாக பார்க்கப்படுகிறது.

Related Stories:

>