இலங்கையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் தொடக்கம்! 7452 பேர் தேர்தலில் போட்டி.!!

கொழும்பு: இலங்கையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெறுகிறது. மொத்தம் 196 பிரதிநிதிகள் கொண்ட நாடாளுமன்றத்தில் இடம் பெற வேட்பாளர்களாக மொத்தம் 7,452 பேர் போட்டியிடுகின்றனர். கொரோனா தொற்று காரணமாக தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்ட அரசு, ஆகஸ்ட் 5ம் தேதியே தேர்தலை நடத்த முடிவு செய்தது.

இலங்கை பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் இந்த தேர்தலில் சிங்களவர் தரப்பில் தற்போதைய ஆளும் கட்சியான ராஜபக்சே சகோதரர்களின் பொதுஜன பெரமுனவும், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சியும், சஜித் பிரேமதாசா தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியும்,  மைத்ரிபாலவின் சுதந்திர கட்சியும் களத்தில் உள்ளன. 2015ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 16 இடங்களை கைப்பற்றிய தமிழ் தேசிய கூட்டணி, 29 இடங்களில் போட்டியிடுகிறது.

இலங்கை முழுவதும் 12,984 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 1 கோடியே 62 லட்சத்து 63 ஆயிரம் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். வாக்கு எண்ணிக்கை ஆகஸ்ட் 6ம் தேதியே நடைபெறவுள்ளது. நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஸ்ரீலங்கா முழுவதும் விசேட பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் கோத்தபாய ராஜபக்சே  வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories: