×

2வது ஒரு நாள் போட்டியிலும் வெற்றி தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து

சவுத்தாம்ப்டன்: அயர்லாந்து உடனான 2வது ஒருநாள் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இங்கிலாந்து 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி அங்கு 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது. இது ஐசிசி உலக கோப்பை தகுதி சுற்று சூப்பர் லீக் போட்டித் தொடர். இந்த போட்டிகள் பகல்/இரவு போட்டிகளாக சவுத்தாம்ப்டன் நகரில் நடைபெற்று வருகிறது. இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி முதல் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் 2வது ஒருநாள் போட்டி சவுத்தாம்ப்டன் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் களமிறங்கியது. இங்கிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆரம்பத்திலேயே அயர்லாந்து அணி தட்டுத்தடுமாறி விளையாட ஆரம்பித்தது. ஹாரி டெக்டோர் 28, லோர்கேன் டக்கெர் 21, சிமி சிங் 25, ஆன்டி மெக்பிரைன் 24ரன் சேர்த்தனர். பொறுப்புடன் விளையாடிய கர்ட்டிஸ் கேம்பர் 87 பந்தில் 8 பவுண்டரிகளுடன் 68 ரன் குவித்தார்.  அயர்லாந்து அணி 50ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து தரப்பில் அடில் ரஷித் 3, டேவிட் வில்லி, சாகிப் மகமூத் ஆகியோர் தலா 2, ரீஸ் டாப்ளி, ஜேம்ஸ் வின்ஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் டக் அவுட்டாகி வெளியேற அயர்லாந்து உற்சாகம் அடைந்தது. அடுத்து ஜேம்ஸ் வின்ஸ் 16, டாம் பான்டன் 15 ரன்னில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும், தொடக்க ஆட்டக்காரர் ஜானி பேர்ஸ்டோ பொறுப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். அவர் 41 பந்துகளில் 14 பவுண்டரி, 2 சிக்சருடன் 82 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் மோர்கன், மொயீன் அலி டக் அவுட் ஆகி வெளியேறினர். அப்போது இங்கிலாந்து அணி 17.5 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 137 ரன் எடுத்திருந்தது. அதனால் ஆட்டம் அயர்லாந்து பக்கம் திரும்பியது.

ஆனாலும் களத்தில் இருந்த சாம் பில்லிங்ஸ், டேவிட் வில்லி இருவரும் பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு இட்டுச் சென்றனர். அதனால் இங்கிலாந்து அணி 42.3 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 216 ரன் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி வரை களத்தில் இருந்த சாம் பில்லிங்ஸ் 46 ரன் (61 பந்து, 6 பவுண்டரி), டேவிட் வில்லி 47 ரன் (46 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். அயர்லாந்து தரப்பில் ஜோஷ் லிட்டில் 3 விக்கெட், கர்ட்டிஸ் கேம்பர் 2 விக்கெட், கிரெய்க் யங் ஒரு விக்கெட் வீழ்த்தினர். ஆட்டத்தின் சிறந்த வீரராக ஜானி பேர்ஸ்டோ தேர்வு செய்யப்பட்டார். மொத்தம் 3 போட்டிகள் கொண்ட தொடரை இங்கிலாந்து 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து சமீபத்தில் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து-அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி நாளை சவுத்தாம்ப்டன் நகரில் நடைபெறுகிறது.

Tags : England ,ODI , 2nd ODI, Winning Series, Captured, England
× RELATED ஆஸி.யுடன் 2வது ஒருநாள் போட்டி பதிலடி தந்தது இங்கிலாந்து