நவம்பர் 10ல் ஐபிஎல் பைனல்

புதுடெல்லி: ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்க உள்ள ஐபிஎல் டி20 தொடரின் இறுதிப் போட்டி நவம்பர் 10ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பீதி காரணமாக தள்ளி வைக்கப்பட்ட ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகள் இந்த ஆண்டு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. ரசிகர்கள் இல்லாமல் பூட்டிய அரங்கில் நடத்த அரசு அனுமதி அளித்தாலும், இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் ஐபிஎல் போட்டியை  ஐக்கிய அரபு அமீரகத்தில் (யுஏஇ) நடத்த பிசிசிஐ முடிவு செய்தது. இந்த தொடர் செப்.19ம் தேதி தொடங்கி நவ.8ம் தேதி வரை நடைபெறும் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவித்தது. யுஏஈ கிரிக்கெட் அமைப்பு மற்றும் அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால் இது உத்தேச தேதிதான் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், இந்தியாவில் தீபாளி விழாக்காலம் என்பதால் நவம்பர் 8ம் தேதி பைனலை நடத்தாமல் வேறு தேதிக்கு தள்ளிவைக்க வேண்டும் என்று போட்டியை ஒளிபரப்ப உள்ள ஸ்டார் டிவி தரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, போட்டி அட்டவணை உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக ஐபிஎல் நிர்வாகக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் இறுதிப் போட்டியை நவ.8ம் தேதியில் இருந்து நவ.10ம் தேதிக்கு தள்ளிவைக்க முடிவு எடுக்கப்பட்டது. மேலும், இரவு ஆட்டங்கள் இந்திய நேரப்படி 8.00 மணிக்கு பதிலாக 7.30க்கு தொடங்க உள்ளன. மொத்தம் 10 நாட்களில் மாலை மற்றும் இரவு என தலா 2 ஆட்டங்களை நடத்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: