×

புதிய கல்விக் கொள்கை குறித்து மவுனம் சாதித்து மாணவர்களின் எதிர்காலத்துக்கு துரோகம் செய்துவிடக் கூடாது: அதிமுக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: ‘அரசியல் ரீதியாக மத்திய அரசுக்கு பயந்து, புதிய கல்விக் கொள்கை குறித்து மவுனம் சாதித்து, தமிழ்நாட்டு மக்களின், மாணவர்களின் எதிர்காலத்துக்கு அதிமுக அரசு துரோகம் செய்துவிடக் கூடாது’ என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் ‘புதிய கல்விக் கொள்கை’ பற்றிய காணொலிக் கருத்து மேடை நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி, பேராசிரியர் கருணானந்தம் , விஞ்ஞானி ராமானுஜம், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, மருத்துவர் எழிலன் உள்ளிட்டோர் கருத்துக்களை வழங்கினர். திமுக மக்களவை குழுத்துணைத் தலைவர் கனிமொழி வரவேற்புரையாற்றினார்

இந்நிகழ்வில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
புதிய கல்வி கொள்கை அறிக்கை குறித்து ஆராய கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் திமுக சார்பில் ஆய்வுக்குழு அமைத்தோம். அக்குழுவில் பத்து கல்வியாளர்கள் இடம்பெற்று இருந்தார்கள். அவர்கள் ஓர் அறிக்கையைக் கொடுத்தார்கள். இப்படி பல்வேறு பரிந்துரைகளைச் சொல்லி அறிக்கை தயாரிக்கப்பட்டது. கடந்த ஜூலை28ம் தேதி மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சருக்கு திமுக உறுப்பினர்கள் மூலமாக நேரில் கொண்டு சென்று இந்த அறிக்கை தரப்பட்டது. இந்த புதிய கல்விக் கொள்கையை மொத்தமாக திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். ஆனால் அது எதையும் ஏற்காமல் மத்திய அரசு, அந்தக் கொள்கையை அமல்படுத்தி விட்டது. இவர்களுக்கு நிரந்தரமான கொள்கை என்று எதுவும் இல்லை என்று தெரிகிறது.

நேற்றைய முன்தினம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இக்கல்விக் கொள்கை பற்றி உண்மைக்குப் புறம்பான கருத்துக்களைப் பேசி இருக்கிறார். மாணவர்களின் ஒளிமயமான எதிர்காலத்தை மனதில் கொண்டு இத்திட்டத்தை உருவாக்கி இருக்கிறோம் என்று சொல்லி இருக்கிறார் பிரதமர். இப்போது நீங்கள் அறிமுகம் செய்திருக்கும் திட்டத்தால் மாணவர்கள் பலரும் பாதியிலேயே பள்ளிகளை விட்டு விரட்டப்படுவார்கள் என்று சொல்ல விரும்புகிறேன்.
அனைவருக்கும் கல்வி கிடைக்கும் என்று  பிரதமர் சொல்லி இருக்கிறார். இல்லை பிரதமர் அவர்களே உயர் கல்விக்கு மாணவர்கள் செல்வது தடுக்கப்படும் என்று நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

கல்வித் தரம் மேம்பாடு அடையும் என்று பிரதமர் சொல்லி இருக்கிறார். கல்வி உரிமையை மறுத்து அனைவரையும் தொழிற்சாலைகளை நோக்கி துரத்துகிறீர்கள் என்று நான் குற்றம் சாட்டுகிறேன். தாய்மொழி மூலம் சிந்தித்து, கண்டுபிடிப்புகளை மாணவர்கள் நிகழ்த்துவார்கள்” என்று பிரதமர் சொல்லி இருக்கிறார். இந்தி மூலமாகவும், சமஸ்கிருதம் மூலமாகவும் சிந்திக்க வழிகாட்டுகிறீர்கள்; தாய்மொழி புறக்கணிக்கப்படுகிறது என்று குற்றம் சாட்டுகிறேன். வெளிச்சம் பாய்ச்சி இருக்கிறோம் என்கிறீர்கள். இல்லை இருந்த வெளிச்சத்தை இருட்டாக்கி இருக்கிறீர்கள் என்று சொல்கிறேன்.

வேலைவாய்ப்பைத் தேடாமல் வேலைவாய்ப்பை மாணவர்களே உருவாக்கிக் கொள்ள பாதை அமைத்துள்ளோம் என்று பிரதமர் சொல்லி இருக்கிறார். இல்லை மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தரும் கடமையில் இருந்து இந்த அரசு நழுவி விட்டது என்று நான் சொல்கிறேன். பிரதமர் சொல்வது போல, அனைவருக்கும் கல்வி கிடைக்காது. பிரதமர் நாட்டு மக்களை ஏமாற்றுவதாக நினைத்து தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்கிறார். இந்தக் கல்விக் கொள்கை அமலானால், இன்னும் பத்து ஆண்டுகளில் கல்வி என்பது சிலருக்கு மட்டுமே சொந்தமானதாக ஆகிவிடும். கிராமங்கள் சிதைந்துவிடும். ஏழைகள் மேலும் ஏழைகளாக ஆவார்கள்.

இந்தியாவின் பலமே இளைஞர் சக்தி என்பார்கள். அந்த இளைஞர் சக்தியை பெரும்பாலும் இழந்துவிடுவோம். இளைஞர் சக்தி இல்லாத இந்தியாவைத்தான் இந்த புதிய கல்விக் கொள்கை உருவாக்கும் எனப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறேன்.
இவற்றை திமுக எதிர்ப்பதைப் போல அனைத்துக் கட்சிகளும் எதிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். குறிப்பாக, ஆளும் கட்சி எதிர்க்க வேண்டும். புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு மறுக்க வேண்டும். நிராகரிக்க வேண்டும்.
பேரறிஞர் அண்ணாவின் பெயரைக் கட்சியின் பெயரில் இணைத்துக் கொண்டிருக்கும் அதிமுக மும்மொழிக் கொள்கையைக் கொண்ட புதிய கல்விக் கொள்கையை எதிர்க்காமல் மௌனம் சாதிக்கக் கூடாது. அப்படி மௌனமாக இருந்தால், அது பேரறிஞர் அண்ணாவின் பெயருக்கு அவமானம்.

அரசியல் ரீதியாக மத்திய அரசுக்குப் பயந்து தமிழ்நாட்டு மக்களின், மாணவர்களின் எதிர்காலத்துக்கு துரோகம் செய்து விடாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். ஊரடங்குக் காலத்தில் மறைமுகமாகப் புகுத்தப்படும் இக்கல்விக் கொள்கையை இறுதிவரை எதிர்ப்போம். அனைவருக்குமான கல்வி என்பது நமது இலக்கு. நூறு ஆண்டுகளுக்கு முன்னால் நீதிக்கட்சி ஆட்சியால் விதைக்கப்பட்ட விதை  இந்த சமூகநீதிக் கல்வி. நீதிக்கட்சியால் விதைக்கப்பட்டு பெருந்தலைவர் காமராஜரால் பள்ளிக் கல்வியாக பயிராகி முத்தமிழறிஞர் கலைஞரால் கல்லூரிக் கல்வியாக மரமாகி இன்று தமிழ்நாட்டு மாணவச் செல்வங்கள் உலகத்தின் எல்லா நாடுகளிலும் அறிவுச்சக்தியாகத் திகழ்கிறார்கள். அத்தகைய கல்வி ஒளியை அணைய விடமாட்டோம். அதனை அணைக்க நினைப்பவர்களிடமிருந்து, தமிழ்மக்கள் அனைவரும் சேர்ந்து தமிழகத்தின் கல்வி ஒளியைக் காப்போம். இவ்வாறு அவர் பேசினார். புதிய கல்வி கொள்கையால் கிராமங்கள் சிதைந்துவிடும். ஏழைகள் மேலும் ஏழைகளாக ஆவார்கள்.

Tags : MK Stalin ,government ,AIADMK , New Education Policy, Silence Achieved, Student, Betrayal, AIADMK Government, MK Stalin, Appeal
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...