புதிய கல்விக் கொள்கை இந்திய கல்வி முறையை உலக தரத்துக்கு உயர்த்தும்: பாஜ தலைவர் உறுதி

சென்னை: பாஜ தலைவர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஒவ்வொரு மாணவரின் தனித்தன்மை மற்றும் திறமையை வெளிக்கொண்டு வரும் வகையில் புதிய கல்விக் கொள்கை 2020 உருவாக்கப்பட்டுள்ளது. மழலையர் கல்வி முதல் இடைநிலைக் கல்வி வரை அனைத்து மட்டத்திலும், பள்ளிக் கல்விக்கு உலக அளவிலான அணுகுமுறையை புதிய கல்விக் கொள்கை உறுதி செய்கிறது. உலக அளவில் நம் மாணவர்கள் போட்டி போடுவதற்கு, இப்புதிய கல்விக் கொள்கை அடிப்படையாக அமைவது உறுதி. அறிவு, கற்றல், ஆற்றல் அனைவருக்கும் சொந்தம் என்பதை இக்கொள்கை வலியுறுத்துகிறது.

ஏழை, பணக்காரர், அரசு பள்ளி, தனியார் பள்ளி என மாணவர்கள் கல்வி கற்பதில் உள்ள பாகுபாடுகள், இப்புதிய கல்விக் கொள்கையால் முற்றிலும் மறைந்துவிடும். மும்மொழித்திட்டம் என்பது தமிழ்நாட்டைத் தவிர அனைத்து மாநிலங்களிலும் இப்போதும் செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. சம்ஸ்கிருதம், இந்தி என்பது எந்த மாநிலத்திலும் கட்டாயப்படுத்தப்படவில்லை. தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காகவே இது போன்ற பொய்ப் பிரசாரங்களை செய்கிறார்கள். புதிய கல்விக் கொள்கை நாட்டின் வளர்ச்சிக்கானது. மாணவர்களின் எதிர் காலத்துக்கானது. அவர்கள் வாழ்வில் ஒளி வீசச் செய்திடப்போவது. இதையும் சுய நோக்கத்தோடு, காழ்ப்புணர்ச்சியோடு விமர்சிப்பதை கண்டிக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: