கொரோனா சிகிச்சைக்கு கூடுதலாக தற்காலிக மருத்துவமனை அமைக்க வேண்டும்: எம்எல்ஏ எழிலரசன் வலியுறுத்தல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் கொரோனா சிகிச்சைக்கு கூடுதலாக தற்காலிக மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம், காஞ்சிபுரம் எம்எல்ஏ வக்கீல் எழிலரசன் கோரிக்கை மனு அளித்தார். அதில், கூறியிருப்பதாவது. காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படும் உயிர்காக்கும் ஊசி மருந்துகளாக உள்ள ரெம்டெசிவர் மற்றும் டாசில்சிமாப் ஆகியவை இல்லை. எனவே உடனடியாக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தட்டுப்பாடின்றி மருந்து கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும்.

காஞ்சிபுரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதிய வசதிகள் இல்லை. எனவே தற்காலிகமாக மருத்துவமனை ஏற்படுத்தி கொரோனா சிகிச்சைக்கு இடவசதி ஏற்படுத்த வேண்டும். மேலும், பரிசோதனை முகாம்கள் அதிகப்படுத்தி, பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும். கொரோனா சிகிச்சையில் சித்த மருத்துவர் வீரபாபு மேற்கொள்ளும், சிகிச்சை முறையை ஒரு மருத்துவ குழுவை அமைத்து, விடுதி வசதியுடன் தனியார் அல்லது அரசு கல்லூரியில் முகாம் அமைத்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

மாவட்டத்தில் மாலை 5 மணிக்கு கடைகள் மூட வேண்டும் கலெக்டர் அறிவித்துள்ளார். இதனை மாலை 7 மணி வரை என மாற்ற வேண்டும். காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் 14,15,16,17,18, 19 ஆகிய வட்டத்தில் உள்ள மக்களுக்கு குறைந்தபட்ச நிவாரணமாக ரூ.1000 வழங்க வேண்டும். காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் இயக்குவதற்கு தொழில்நுட்ப பணியாளரை நியமிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அப்போது, கலெக்டர் பொன்னையா, எஸ்பி சண்முக பிரியா, சப் கலெக்டர் சரவணன், திட்ட இயக்குநர் ஸ்ரீதர், திமுக நிர்வாகிகள் யுவராஜ், கிரி, செந்தில் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories: