100நாள் வேலை திட்டத்தில் கல் உடைக்கும் கிரிக்கெட் வீரர்

ராயல்கோட்: ஊரடங்கால் வருமானமின்றி தவித்த சக்கர நாற்காலி கிரிக்கெட்வீரர்  100நாள் வேலை திட்டத்தில் கல்  உடைக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார். உத்ரகாண்ட் மாநிலம் ராயல்கோட் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திர சிங் தாமி (34). அவரது 2வது வயதில் திடீர் காய்ச்சலால் இடுப்புக்கு கீழ் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டது. ஆனாலும் மனம் தளராமல் மாற்றுத்திறனாளிகளுக்கான குண்டு எறிதல், வட்டு எறிதல் போன்ற விளையாட்டுகளில் பயிற்சி பெற ஆரம்பித்ததுடன் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றார். பின்னர் அவரது கவனம் சக்கர நாற்காலி கிரிக்கெட் பக்கம் திரும்பியது. ஆல்ரவுண்டராக வலம் வந்த ராஜேந்திர சிங், கூடவே பயிற்சியாளராகவும் பணியாற்றினார்.

விளையாட்டின் மூலம் கிடைத்த பரிசுத் தொகை, உதவித்தொகை,  பயிற்சியாளர் பணி மூலம் வந்த வருமானம் ஆகியவற்றின் மூலம் குடும்பத்தை கவனித்து வந்தார்.

பெங்களூரில் பயிற்சியில் இருந்தவர், ஊரடங்கு காரணமாக மார்ச் மாதம் ராயல்கோட் திரும்பினார். கையிலிருக்கும் காசை வைத்து கொஞ்ச நாட்கள் சமாளித்தவர், தொடர்ந்து வருமானம் இல்லாமல் சிரமப்பட்டுள்ளார். இதனால், ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு கிடைத்த வேலைகளைசெய்ய ஆரம்பித்துள்ளார். மேலும் மாநில அரசின் தேசிய வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் கிடைத்த 100நாள் வேலையில் கல் உடைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். ஒருநாள் முழுவதும்  கல் உடைத்தால் 400ரூபாய் கிடைக்குமாம். அதை வைத்துதான் வயதான பெற்றோர், உடன் பிறந்தவர்களை கவனித்து வருகிறார்.

இந்த தகவல் உள்ளூர் ஊடகங்களில் வெளியானதும் இந்திய ஒலிம்பிக் சங்கம் 50 ஆயிரம் வழங்கியுள்ளது. மாநில அரசும் 20 ஆயிரம் தந்துள்ளது. இது குறித்து கூறுகையில், ‘ஊரடங்கிற்கு பிறகு நிலைமை மாறிவிட்டது. குடும்பத்தின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதே சிரமமாகிவிட்டது. கிடைக்கும் வருமானத்தில் வீட்டில் உள்ளவர்களின் 2 வேலை உணவுக்குதான் உத்தரவாதம்.  இந்தவேலை செய்வதில் எனக்கு வெட்கம் ஏதுமில்லை.  பிச்சை எடுப்பதை விட கடினமாக உழைப்பதில் தவறில்லை.

என்னைப்போல் ஏராளமான விளையாட்டு வீரர்கள் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் அரசு மற்றும் அமைப்புகள் உதவி செய்ய வேண்டும்’ என்கிறார் தாமி.

இந்தியாவில் சக்கர நாற்காலி கிரிக்கெட் தொழில்முறை விளையாட்டாக இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. அதனால் இந்த விளையாட்டையும், வீரர்களையும் பிசிசிஐ கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Related Stories: