×

அரை இறுதி வாய்ப்பை இழந்தார் ஆனந்த்

சென்னை: முன்னனி வீரர்கள் பங்கேற்கும் ஆன்லைன் செஸ் போட்டியில் அதிக தோல்விகளை சந்தித்த ஆனந்த் அரை இறுதி வாய்ப்பை இழந்து வெளியேறினார். ‘லெஜண்ட்ஸ் ஆப் செஸ்’ தொடரில் மொத்தம் 10 வீரர்கள் பங்கேற்ற நிலையில், 9 சுற்றுகள் கொண்ட லீக் சுற்று முடிந்துள்ளது. ஆனந்த் முதல் 6 சுற்றுகளில் ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. 7 வது சுற்றில் இஸ்ரேலின்  போரிஸ் கெல்பாண்டை 2.5-0.5 என்ற புள்ளி கணக்கில் அசத்தலாக வீழ்த்தினார். அடுத்து 8வது சுற்றில் தோற்ற ஆனந்த் கடைசி மற்றும் 9வது சுற்றில் உக்ரைனின் வஸ்ஸிலி இவான்சுக்குடன் மோதினார். மொத்தம் 3 போட்டிகள் கொண்ட இந்தச் சுற்றில் இரண்டு பேரும் சமபலத்துடன் விளையாட போட்டி 2.5-2.5 என்ற புள்ளி கணக்கில் டிரா ஆனது. ஆனாலும் டை பிரேக்கேரில் ஆனந்த் தோல்வி அடைந்தார்.

ஆனந்த் விளையாடிய 9 சுற்றுகளில் ஒரு வெற்றி, 8 தோல்விகளுடன் 7 புள்ளிகள் பெற்று 9வதுஇடத்தை பிடித்தார். இதனால் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து வெளியேறினர். நடப்பு உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் (நார்வே ) 25 புள்ளி, நெப்போம்னியாட்ச்சி (ரஷ்யா ) 20 புள்ளி, அனீஷ் கிரி (நெதர்லாந்து) 18புள்ளி, பீட்டர் ஸ்விட்லர் (ரஷ்யா) 14 புள்ளிகள் பெற்று அரையிறுதிக்கு முன்னேறினர். அரை இறுதி போட்டிகள் இன்று முதல் ஆக.2ம் தேதி வரை நடைபெறும். இறுதிப் போட்டி ஆக.3, 4, 5 தேதிகளில் நடைபெறும். மொத்தம் 1.5லட்சம் அமெரிக்க டாலர் பரிசுத் தொகை கொண்ட இந்தப் போட்டியில் முதல் இடம் பிடிப்பவருக்கு 45 ஆயிரம் டாலர் பரிசுத் தொகை கிடைக்கும். 9வது பிடித்த ஆனந்துக்கு 5000 டாலர் பரிசுத் தொகை வழங்கப்படும்.

Tags : Anand , Semi-final, missed opportunity, Anand
× RELATED உச்ச நீதிமன்றம் அறிவிப்பு: நேரடி விசாரணைக்கு வாய்ப்பில்லை