கிச்சன் டைரீஸ்

நன்றி குங்குமம் தோழி

Advertising
Advertising

டயட் மேனியா

ஃப்ரூட்டேரியன் டயட் என்ற பெயரே சொல்லிவிடுகிறது இது என்ன மாதிரியான டயட் என்று… யெஸ். இந்த டயட்டில்  பழங்களை மட்டும்தான் சாப்பிட வேண்டும். இதுவும் ரொம்ப பழங்கால டயட்தான். மேற்குலகில் ஓவியர் டாவின்சி  போன்றவர்கள் பின்பற்றியிருக்கிறார்கள். டயட் நாயகனான நம்ம காந்தி தாத்தா இதையும் ட்ரை செய்திருக்கிறார்.  ஆப்பிள் நிறுவன அதிபர் ஸ்டீவ் ஜாப்ஸ் இந்த டயட்டில் இருந்திருக்கிறார் (அதான் லோகோவில் ஆப்பிள் இருக்கான்னு  கேட்காதீங்க?) அப்புறம் ஃப்ரூட்டேரியன் டயட் என்று பொதுவாகச் சொன்னாலும் இதில் பல ரகங்கள் உள்ளன. சிலர்  பழங்களோடு காய், கறிகளையும் சேர்த்துச் சாப்பிடுவார்கள். பருப்புகள், நட்ஸ் சேர்ப்பவர்களும் உண்டு. புரதச்சத்து,  கார்போஹைட்ரேட், கொழுப்புச்சத்தை நீக்க வேண்டும் என்றால் நட்ஸ், பருப்புகள் நீக்கலாம்.

ஃப்ரூட்டேரியன் டயட்டில் ஒரு குறிப்பிட்ட வகை பழத்தை உண்டபின் 45 - 90 நிமிடங்களுக்கு வேறு வகை  பழங்களைச் சாப்பிடக் கூடாது. பசி அடங்கவில்லை என்றால் பசி தீரும் வரை அதே வகை பழத்தைத்தான் சாப்பிட  வேண்டும். தொடர்ந்து ஒரேவகையான பழத்தைச் சாப்பிடும்போது சாப்பிடுவதற்கான ஆர்வம் குறையும் என்பதால் பசி  தானாகவே மட்டுப்படும் என்பதுதான் இதன் சூட்சுமம். பழங்கள்தான் பிரதான உணவு என்பதால் இந்த டயட்டில் தண்ணீர்  அதிகமாகப் பருக வேண்டிய தேவை இருக்காது. ஆனால், பழங்களுடன் காய்கறிகள் அதிகமாக எடுத்துக்கொள்ளும்போது  தண்ணீர் போதுமான அளவு பருக வேண்டியது அவசியம்.

சாப்பிட வேண்டிய பழங்களின் லிஸ்ட் இது

அமிலச்சத்துள்ள பழங்கள் (Acid fruits): எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி, கமலா ஆரஞ்சு போன்ற சிட்ரஸ்  பழங்கள், ஆப்பிள், அன்னாசி, ஸ்ட்ராபெர்ரி, மாதுளை, கிவி, பேரிக்காய். துணை அமிலச்சத்து உள்ள பழங்கள் (Subacid fruits): செர்ரி, ரேஸ்பெர்ரி, நெல்லிக்காய், பிளாக்பெர்ரி,  ப்ளூபெர்ரி, பீச், பியர்ஸ், நாவல் பழம், பப்பாளி, அத்தி, ஆப்ரிகாட்ஸ், மாம்பழம்.இனிப்புப் பழங்கள் (Sweet fruits): வாழைப்பழம், திராட்சை, முலாம் பழம், கிர்ணிப்பழம், தர்பூசணி, பலாப்பழம்.நட்ஸ்கள்: முந்திரி, பாதாம், வால்நட், வாதாங்கொட்டை, பிஸ்தா, பைன் நட், ஹிக்கரி.விதைகள்: சூரியகாந்தி விதைகள், எள்ளு, பூசணி விதைகள், பருத்தி விதை, பலாப்பழக் கொட்டைகள்.உலர் பழங்கள்: பேரீச்சை, அத்தி, ஆப்ரிகாட், செர்ரி, கிரேன் பெர்ரி, உலர் திராட்சை.எண்ணெய் வித்துக்கள்: அவகடோ, தேங்காய், ஆலிவ்.

டீத்தூள் தகிடுதத்தம்கள்

சில கடைகளில் டீ குடித்தால் டீத்தூளின் சுவையே இருக்காது. கவனித்திருக்கிறீர்களா? ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட டீத்தூளை வெயிலில் உலர்த்தி மீண்டும்  பயன்படுத்துவது தான் காரணம். சில சமயங்களில்  டீக்கடைக்காரருக்கே இது தெரியாது. அவர் ஏதேனும் லோக்கல் பிராண்ட் வாங்குவார். டீ தூள் புதிது போல் இருக்க  வேண்டும் என்பதற்காக உபயோகப்படுத்தப்பட்ட டீத்தூளில் டார்டாரின் என்ற நிறமியைச் சேர்த்து விற்கிறார்கள் கலப்பட  மன்னர்கள். டார்டாரின் நமது செரிமான மண்டலத்தை டார் டாராக கிழிக்கும் மோசமான ரசாயனம். டீத்தூளை ஒரு  பேப்பரில் கொட்டி அதன் மேல் சில நீர் துளிகள் விட வேண்டும். காகிதத்தில் செந்நிறம் ஒட்டிக்கொண்டால் அதுதான்  டார்டாரின். லோக்கல் பிராண்ட் டீத்தூளுக்கு ஸ்ட்ரிக்ட் நோ சொல்வதுதான் தப்ப ஒரே வழி.

வேண்டாம் வெள்ளை உணவு

வெள்ளையாக உள்ள உணவுப் பொருள் எதுவாக இருந்தாலும் கொஞ்சம் அளவாக உண்ண வேண்டும் என்கிறார்கள்  உணவியல் நிபுணர்கள். குறிப்பாக, உப்பு, சர்க்கரை, முட்டை போன்றவை. உப்பு அதிகரிப்பதால், உயர் ரத்த அழுத்தம்,  இதயநோய்கள், வலிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. ஆரோக்கியமான ஒருவர் தினசரி 5-8 மி.கி உப்பு  பயன்படுத்துவது நல்லது. சோடியமும் கலோரியும் 1:1 என்ற விகிதத்தில் இருப்பதுதான் ஆரோக்கியம். அதாவது, 1000  கலோரி உணவில் 1000 மி.கி சோடியம் இருக்க வேண்டும். அதற்கு சற்றுக் குறைவாக இருந்தாலும் தவறு இல்லை.  கண்டிப்பாக அதிகமாக இருக்கக் கூடாது.

அதுபோலவே, வெள்ளைச் சர்க்கரையும் ரிஸ்க்தான். உடலின் ஊளை சதையை  அதிகரிப்பதில் சர்க்கரையின் பங்கு அதிகம். கை, கால் வலி, மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் இரண்டு வாரங்கள்  வெள்ளை சர்க்கரையை முற்றிலும் நிறுத்திவிட்டாலே வலி பறந்துவிடும் என்கிறார்கள் ஆர்த்தோ மருத்துவர்கள். சூப்பர்  மார்க்கெட்டில் வாங்கும் உணவுப் பொருட்களில் ஹைஃபிரக்டோஸ் கார்ன் சிரப், கார்ன் சிரப், ஃப்ரக்டோஸ்,  குளுக்கோஸ், டெக்ஸ்ட்ரோஸ், சுக்ரோஸ், தேன், மோலாசஸ் (Molasses), கரும்புச்சாறு (Evaporated cane  juice) என்று எழுதப்பட்டிருப்பவையும் இனிப்புகளே. இவற்றில் ஏதேனும் இரண்டு காம்பினேஷலுக்கு மேல்  இருந்தால் அதைத் தவிர்ப்பதே நல்லது.

உணவு விதி # 5

பசித்துப் புசி. உணவை மூன்று வேளை, ஐந்து வேளை என்று அவரவர் வசதிக்கு ஏற்ப பிரித்துச் சாப்பிடலாம். ஆனால்,  மிக முக்கியமானது பசியுணர்வு வந்த பிறகு சாப்பாட்டுத் தட்டில் கைவைப்பதுதான் நல்லது. அதற்காக, பசி இல்லை  என்று தினமும் ஒரு வேளை, இரு வேளை மட்டுமே உண்ணக் கூடாது. மணி அடித்தது போல் மூன்று வேளையும் பசி  இல்லை என்றால் சம் திங் ராங். உடலை கவனிங்க.

சிவப்பு அரிசிக்கு ஜே போடுங்க!

வெள்ளைப் பொன்னி அரிசி மட்டுமே சாப்பிட்டு பழக்கமாகிவிட்டது நமக்கு. அரிசி களில் சிவப்பு, கறுப்பு, பழுப்பு,  வெள்ளை எனப் பல வண்ணங்கள் உள்ளன. அது போலவே தடித்த மோட்ட ரகம், சன்ன ரகம், நீள ரகம் என்று பல  ரகங்கள் உள்ளன. ஒரு காலத்தில் இதை ஒவ்வொன்றையுமே சாப்பிட்டு வந்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.  குறிப்பாக, சிவப்பு அரிசி. வெள்ளை அரிசியில் உள்ளதைவிட சிவப்பு அரிசியில் சத்துக்கள் அதிகம். உமி, தவிடு, கரு,  மாவுப்பொருள் என நெல்லில் நான்கு பகுதிகள் இருக்கும். இதில், உமியில்தான் சத்து அதிகம். நம் உடல் அதனை  செரிக்கும் அளவு திறன் கொண்டது இல்லை என்பதால் அதை கால்நடைகளுக்குத் தருகிறோம்.

சிவப்பு அரிசியில் கருவைத் தாண்டி மாவுப்பொருள் வரை சத்துக்கட்டுமானம் சிறப்பாக உள்ளது. கி.மு ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த சரகர் எனும் ஆயுர்வேத பிதாமகர் சிவப்பு அரிசியின் சிறப்பைப் பற்றி சிலாகித்துள்ளார். ஏனோ, இந்தக் காலத்தில்தான் நாம் இந்த அரிசியைக் கண்டுகொள்வது இல்லை. சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நம் முன்னோர்கள்  உண்டிருக்கிறார்கள். குவித்து வைத்திருக்கும் சிவப்பு அரிசியில் உடும்புக் கறியிட்டு உண்ணும் பெண் பற்றிய சித்திரம்  ஒன்று சங்க இலக்கியத்தில் வருவதே அதற்கு சாட்சி.

எக்ஸ்பர்ட் விசிட்

வெயிட் லாஸ்தான் இன்று பெரும்பாலான பெண்களின் ரகசிய லட்சியமாக இருக்கிறது. இந்தியாவின் புகழ்பெற்ற டயட்  குருவும், ப்ரியங்கா சோப்ரா உட்பட பல்வேறு செலிபிரிட்டிகளின் டயட் கவுன்சலருமான அஞ்சலி முகர்ஜி என்ன  சொல்கிறார் என்று பார்ப்போம். ‘அன்றாடம் அரை மணி நேரம் உடற்பயிற்சி என்பதைத் தவிர்த்துவிட்டு வெயிட் லாஸ்  என்பதைப் பற்றி யோசிக்கவே யோசிக்காதீர்கள். அதேபோல காலை எக்காரணத்தை முன்னிட்டும் சாப்பிடாமல்  இருக்கக்கூடாது. முடிந்தவரை காலை நன்றாகச் சாப்பிடுங்கள். சர்க்கரை, கொழுப்புச்சத்து உணவுகள் ஆகியவற்றைக்  கறாராகத் தவிர்த்துவிடுங்கள். தினசரி இரண்டு லிட்டர் தண்ணீர் அவசியம். ஆப்பிள் ஒன்று சாப்பிடலாம். தினசரி  எடையை செக் செய்து சோர்ந்து போகாதீர்கள். வாரம் ஒரு நாள் இதைச் செய்யலாம்’ என்கிறார்.

(புரட்டுவோம்!)

- இளங்கோ கிருஷ்ணன்

Related Stories: