×

ஆஹா... என்னா ஒரு ருசி... என்னா ஒரு மணம்: சார்ர்ர்... பிரியாணி... 5.5 லட்சம் பிளேட் தின்னு தீர்த்த இந்தியர்கள்

சாப்பாட்டில் பாரம்பரியம், மேற்கத்தியம், சைனீஸ், ஃபாஸ்ட் புட் என விதவிதமாக எவ்வளவோ வெரைட்டிகள் வந்தாலும், இந்த பிரியாணிய மட்டும் அடிச்சுக்க முடியாது. லாக்டவுனில் கூட இந்தியர்கள் 5.5 லட்சம் முறை பிரியாணியை ஆர்டர் செய்து, நாக்குக்கு வஞ்சகம் செய்யாமல் சாப்பிட்டுள்ளனர். கொரோனா பாதிப்பால் கடந்த மார்ச் மாதம் முதல் நாடெங்கிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. காய்கறி, மருந்து உட்பட அத்தியாவசிய பொருட்கள் தவிர வேறெதுவும் கிடைக்காது என்ற நிலை இருந்தது. பின்னர் சில தளர்வுகள் வழங்கப்பட்டன. உணவு பொருட்களை மட்டும் ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடலாம் என்ற தளர்வும் ஆரம்பத்திலேயே தரப்பட்டது. அதுவும் நேரக்கட்டுப்பாடோடு.

இப்படிப்பட்ட நிலையில், துன்பகரமான லாக்டவுனில் எந்தெந்த உணவுகள் எவ்வளவு விற்பனையாகி இருக்கிறது என பிரபல ஆன்லைன் உணவு சப்ளை நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், லாக்டவுனில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு பிரியாணிதானாம். நம் சக இந்தியர்கள் அவர்களுக்கு விருப்பமான கடைகளில் இருந்து 5.5 லட்சம் பிரியாணி ஆர்டர் செய்து ருசி பார்த்துள்ளனர். பீட்சா, பர்கர் என நாலு பேர் முன்னாடி வெளியில் சாப்பிடும்போது கெத்து காட்டுபவர்கள் கூட வீட்டில் பிரியாணி ஆர்டர் செய்து புல் கட்டு கட்டியுள்ளனர். இதுமட்டுமில்ல தொடர்ந்து 4வது ஆண்டாக ஆன்லைனில் அதிக ஆர்டர் செய்யப்படும் உணவு பட்டியலில் பிரியாணிதான் நம்பர்-1 இடத்தில் இருந்து வருகிறது.

அடுத்ததாக பட்டர் நான்... 3 லட்சத்து 35 ஆயிரத்து 185 ஆர்டரும், நம்மூர் மசாலா தோசை 3 லட்சத்து 31 ஆயிரத்து 423 ஆர்டர்களுடன் 3வது இடத்தையும் பெற்றுள்ளன. இது மட்டுமில்லீங்க, லாக்டவுனில் வேலை இருக்கோ இல்லையோ, வயித்துக்கு மட்டும் வஞ்சகம் செய்யாம எப்பவும் போல நாக்குக்கு ருசியாவே நம்மாளுங்க சாப்பிட்டிருக்காங்க. சாக்கோ லாவா கேக் 1 லட்சத்து 29 ஆயிரம் ஆர்டர் பெற்றுள்ளது. குலோப் ஜாமூன் 84,558, பட்டர்ஸ்காச் மவுஸ்சி கேக் 27,317 ஆர்டர்கள் வந்துள்ளன. பர்த்டே, மேரேஜ் டே போன்ற எல்லா டேக்களையும் (நாட்கள்) லாக்டவுனிலும் கொண்டாடி உள்ளனர். இப்படிப்பட்ட டேக்களுக்காக 1 லட்சத்து 20 ஆயிரம் கேக்குகள் டெலிவரி செய்யப்பட்டுள்ளன. பொதுவாக வாரத்திற்கு ஒருமுறை ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடும் குடும்பஸ்தினர் கூட, லாக்டவுன் சமயத்தில் வாரத்திற்கு 3, 4 முறை ஆன்லைனில் ஆர்டர் செய்து உணவுகளை வாங்கி ருசித்துள்ளனர் என்பது கூடுதல் தகவல்.

* பீக் அவர்ஸ்
இரவு 8 மணி பீக் அவர்ஸ். இந்த நேரத்தில் தினமும் சராசரியாக 65,000 உணவுகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. ரெஸ்டாரன்ட்களும், ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களும் இந்த நேரத்தில்தான் ரொம்ப பிசியாக இருந்துள்ளன.

* காய்கறி சக்கை போடு
உணவுகளை மட்டுமே டெலிவரி செய்த ஆன்லைன் டெலிவரி நிறுவனங்கள் லாக்டவுனில் காய்கறி, பழங்களையும் டெலிவரி செய்யத் தொடங்கின. இதன்படி, 32 கோடி கிலோ வெங்காயம், 5.6 கோடி கிலோ வாழைப்பழம் சப்ளை செய்யப்பட்டுள்ளது. ஈஸி டு குக் போன்ற விரைவு உணவு பாக்கெட்டுகள் 3 லட்சத்து 50 ஆயிரம் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக உணவு, காய்கறி, மருந்து, வீட்டு உபயோக பொருட்கள் என 4 கோடி ஆர்டர்கள் வந்துள்ளன. 73 ஆயிரம் சானிடைசர் பாட்டில்கள், 47 ஆயிரம் மாஸ்க்குகளும் டெலிவரி செய்யப்பட்டுள்ளது.

* உணவு டெலிவரி செய்யும் நபர்களுக்கு டிப்ஸ் சராசரியாக ரூ.23.65 தரப்பட்டுள்ளது.
* அதிகபட்ச டிப்ஸாக ஒருவர் ரூ.2,500 தந்துள்ளாராம்.

Tags : Indians ,Aha ,Charr , Aha ... what a taste ..., what a smell, charr ... biryani ..., 5.5 lakh plate, eaten by Indians
× RELATED நைட் ரைடர்சுடன் இன்று பலப்பரீட்சை மும்பை இந்தியன்சுக்கு நெருக்கடி