சில நூதன சட்டங்களும் நடைமுறைகளும்

நன்றி குங்குமம் தோழி

Advertising
Advertising

மேலை நாடுகளில் பொதுவான சட்டங்கள் உண்டு என்றாலும், சின்னச் சின்ன நகரங்கள் கூட தனக்கென சில சட்டங்களை உருவாக்கி அதனை  நடைமுறைப்படுத்தி வர இயலும். இந்த சட்டங்களில் பல  அபத்தமானவை! படித்து சிரிக்க வைப்பவை! இந்த வகையில் சில நாடுகளின் நூதன சட்டங்களை பார்ப்போம்!

பிரான்ஸ்

* பிரான்ஸ் நாட்டில் தலைமை பதவியில் இருப்பவரை, பெயரை கிண்டலடிக்கக் கூடாது. உதாரணம், ஒரு பன்றிக்கு நெப்போலியனின் பெயரை  வைக்கக்கூடாது. நெப்போலியன் மற்றும் அவர் வழிவந்தவர்கள் ஆட்சியில் இருந்தவரை இந்த சட்டம் அமலில் இருந்தது. பிறகும் தொடர்ந்தது. 2013-ம்  ஆண்டு தான் விலக்கிக் கொள்ளப்பட்டது.

* பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசிஸை 2008-ல் ஒருவர் ‘A Jerk’ எஅழைத்தான். இவனுக்கு 30 யூரோ அபராதம் விதிக்கப்பட்டது.

* பிரான்ஸில் இறந்தவரை, திருமணம் செய்து கொள்வது காலம் காலமாய் தொடருகிறது. சட்டப்படி அந்த நாட்டில் இறந்த ஒருவரை, திருமணம்  செய்ய எண்ணியிருந்த பெண்ணுக்கு, இறந்த பிறகும் திருமணம் செய்து கொள்ள உரிமை உண்டு. 1959ல் ஜனாதிபதி சார்லஸ் டிகாலே பிரெஜுப் என்ற  நகரத்திற்கு சென்றிருந்தார். அங்கு ஒரு அணை திடீரென உடைந்து, பல உயிர்களை காவு வாங்கியிருந்தது.

அங்கு ஒரு பெண்ணை சந்தித்தார். அந்த  பெண்ணின் வருங்கால கணவரும் அந்த விபத்தில் இறந்து போயிருந்தார். அவர், இறந்தவரையே மணக்க விரும்புகிறேன் என விடாப்பிடியாக  கூறியபோது, ஜனாதிபதி அதனை ஏற்றதுடன் சட்டமாகவும் மாற்றி விட்டார். இப்போதும் பிரான்சில் பல டஜன்களில் இத்தகைய இறந்தவரை  திருமணம் செய்வது தொடருகிறது. இது அநேகமாக திருமணம் என ஏற்பட்ட ஆசையை நிறைவு செய்து கொள்வதற்காகவே நடக்கிறது என கூறலாம்.

* தென்கிழக்கு பிரான்சில் வெளி உலகிலிருந்து வந்து இறங்குதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. எங்கே?‘‘சாட்டியயுனெயுப்-டூ-பாப்பே’’ என்ற இடத்தில்  ஒயின்கள் தயாரிக்க உதவும் திராட்சை பண்ணைகள் உள்ளன. இவற்றில் வந்து இறங்கி, திராட்சையையும், ஒயினையும் அபேஸ் செய்து கொண்டு  போய் விடக்கூடாது என்ற சட்டம் இன்று வரை அமலில் உள்ளது.

ஜெர்மனி

* ஜெர்மனியின் லார்ம்பெல்ட் ஸ்டிகுங் பகுதியில் மாமிசத்தை உரக்க கடித்து சாப்பிடுவது குற்றம். இது சப்தமாக கெடுதியாக எடுத்துக் கொள்ளப்படும்.

* ஜெர்மனியில் அரசு விடுமுறை நாட்களில் மாமிசத்தை வெட்டுவதும், கூறுகளாக்கவும் அதன் மூலம் எழும் சப்தத்திற்கும் தடை உள்ளது.

* அப்பார்ட்மெண்டுகளில் வசிப்பவர்கள் காலை 8-12, பிற்பகல் 2 மணி முதல் மாலை 8 மணி வரை மட்டுமே தங்களிடம் உள்ள வாத்தியங்களை இசைக்கலாம், பாடலாம் என ஜெர்மன் பெடரல் கோர்ட் ஆஃப் ஜஸ்டிஸ் ஒரு சட்டம் இயற்றியுள்ளது. இத்தனைக்கும் உலகின் பிரபல இசை மேதைகளான பாச் (Bach), பீத்தோவன், பிராமன் மற்றும் வாக்னர் இந்த பகுதியை சேர்ந்தவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சுவிட்சர்லாந்து

* சுவிட்சர்லாந்து நாட்டு எல்லையில் உள்ள கிராமங்களில் இரவு 10 மணிக்கு மேல் டாய்லெட் சுத்தப்படுத்துதல், கேட்பது தடை விதிக்கப்பட்டுள்ளது! தேசிய அளவில், டாய்லெட்டை சுத்தம் செய்தல் சார்ந்து எந்த சட்டமும் இயற்றப்படவில்லை! ஆனால் ஒரு விதி அமலில் உள்ளது. அதன் படி இரவு டாய்லெட்டை ஃப்ளஷ் செய்தால் பக்கத்து வீட்டாரை மனதில் வைத்து சுத்தம் செய்தல் வேண்டும்.

* மர தரைகளில் ஹை ஹீல்ஸ் செருப்பு அல்லது ஷூ போட்டு நடத்தல், கார் ஹாரன் அடிப்பது, வளர்ப்பு பிராணிகள் சப்தமிடுதல் மற்றும் டாய்லெட் ஃப்ளஷிங் ஆகியவையில் கவனம் தேவை என சுவிஷ் கன்டோன்மென்ட், முனிசிபாலிட்டி, அபார்ட்மெண்டுகளில் வலியுறுத்தப்பட்டு வருவது நிஜம்.

* தனி கன்டோன்மெண்டுகள், தனிப்பட்ட சட்டங்களை இயற்றிக் கொள்ள உரிமை உண்டு. வடகிழக்கு சுவிஸ் கன்டோன்மென்ட் அபார்ட்மெண்டில், நிர்வாணமான நிலையில் நடந்து செல்ல தடையுள்ளது. காரணம் இந்த பகுதி மலைகளும், பள்ளத்தாக்குகளும் நிறைந்த பகுதி! இயற்கையை அனுபவிக்கிறேன் என பலர் நிர்வாண வாக்கிங்கில் இறங்கி விடுகின்றனர். இது அருகில்  வசிப்பவர்களுக்கு தர்மசங்கடத்தை தருகிறது. இதனால்  உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க சட்டமே இயற்றப்பட்டுள்ளது.

இத்தாலி

* இத்தாலியின் ரோம் நகரில் வட்டமான மீன் கிண்ணம் தடை செய்யப்பட்டுள்ளது.

* டரின் நகரில் வளர்ப்பு நாய்களுக்கு தினமும் 3 தடவை கண்டிப்பாய் நடைப் பயிற்சி தர வேண்டும்.

* ரெஜியோ எமிலியா என்ற இடத்தில் பகிர்ந்து சாப்பிடுவதில், பகிரும் பகுதியின் ஒரு பங்கு நகர சபைக்கு வழங்க வேண்டும்.

* இரா இனியா என்ற இடத்தில் தங்கு விடுதிகள் அதிகம். இங்குள்ள மண்ணில் கோட்டைகள் மற்றும் தேவாலயங்கள் கட்ட தடை உண்டு.

* இபோலி கார்களை முத்தமிடுதல் தடை செய்யப்பட்டுள்ளது.

* லெரிசி நகரில் குளித்து விட்டு பீச் டவலை, ஜன்னலுக்கு வெளியே துடைத்துக் கொண்டு சொட்ட சொட்ட போடுதல் கூடாது.

* கேப்ரியின் கடற்கரையில் திடீரென ஓடுவதற்கு தடை உள்ளது.

* வியட்டரி சுல்மாரே, கேஸ்டிலியா மாரே டி ஸ்டாபியா போன்ற பகுதிகளில் மார்பை திறந்து வைத்தபடி, பிகினி டிரஸ் அணிந்து மேல் மார்பக  பகுதியை காட்டியபடி செல்வதும், இலைமறைவு காய் மறைவாய் உடல் முழுவதையும் காட்டும் ஆடைகளையும் அணிந்து செல்ல தடை உள்ளது.

பிரிட்டன்

* பிரிட்டிஷ் பார்லிமெண்டுக்குள் இறப்பது சட்டப்படி குற்றம். 2007ல் இது சார்ந்த ஒரு வாக்கெடுப்பில் இப்படி ஒரு அபத்த சட்டமா என சுட்டிக்  காட்டப்பட்டது. 2013ல் இது பற்றி மேலும் குடைந்தபோது இப்படி ஒரு சட்டமே இயற்றப்படவில்லை என தெரிந்தது. ஆனால் 1313ம் ஆண்டிலிருந்து  ஒரு சட்டம் அமலில் உள்ளது. அதன்படி பார்லிமெண்ட் உறுப்பினர்கள் எக்காரணம் கொண்டும் உடலில் கவசங்கள், தலையில் ஹெல்மெட் ஆகியவை  அணியக்கூடாது. உயிருக்கு ஆபத்து கொண்ட பிரதமர் பதவிக்கும் இது பொருந்தும்.

* லண்டன் மாநகரில் நடைபாதை வழியே மரப்பலகையை எடுத்துச் செல்ல தடை உள்ளது. அது சட்டப்படி குற்றம்.

* வீடு உள்ள இடத்திலிருந்து 274 மீட்டர் தூரத்திற்குள் துப்பாக்கி சூடு நடத்துவதும் இயலாது.

* கடையில் விற்கும் மதுவை அங்கேயே அமர்ந்து அருந்தலாகாது.

* குதிரையை பராமரிக்கும்போது குடித்திருத்தல் கூடாது.

* வெனிஸ் நகரில் புறாக்களுக்கு உணவளித்தல் சட்டப்படி குற்றம். புறாக்கள் நிறைய சாப்பிடும். அதே போல் நிறைய வெளியேற்றவும் செய்யும்.  இந்த புறாக்கள் பாரம்பரிய கட்டிடங்களில் அமர்ந்து இதனை செய்வதால் கட்டிடங்கள் பாழாகின்றன. அவற்றின் அழகு கெடுகிறது.

அமெரிக்கா

* அமெரிக்காவின் லோவரன்வோர்னிஅர்க்கன் சாஸ் நகரில் ஒரு கணவன், மனைவியை அதிகபட்சமாக மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே அடிக்கலாம்  என்று சட்டமிருப்பதாக நம்பப்பட்டது. ஆனால் உண்மையில் இப்படி ஒரு சட்டமே அமலில் இல்லை என்பதே சமீபத்தில் தான் கண்டுபிடிக்கப்பட்டது.

* அலபாமா, அரிஷோனா, கலிபோர்னியா, தென் கரோலினா மாநிலங்களில் மனைவி அனுமதித்தால் தான் கணவன், மனைவியை அடிக்க இயலும்  என சட்டம் உள்ளது. இதே போல் மனைவி ,கணவனை அடிக்கலாமா என்ன?

* கோழிக்குஞ்சு, குள்ள வாத்து, சிறு பறவைகள், முயல்கள் ஆகியவற்றை வண்ணம் ஏற்றி 6-க்கு அதிகமாக விற்க தடையுள்ளது.

* ஹவாய் பார்களில் ஒரு மது பாட்டிலுக்கு மேல் வாங்கினால் அது யாருக்கு என காட்டுதல் வேண்டும்.

* தேசிய மீனான பவழப்பாறையில் நடமாடும் மீனை ஆர்டர் செய்தால் கம்பி எண்ண வேண்டி வரலாம்.

சிங்கப்பூர்

* சிங்கப்பூரில் 1992-ம் ஆண்டு முதல் சுயிங்கம் விற்க தடையுள்ளது. வாங்குவது மருத்துவ காரணங்களுக்காக என ஆதாரம் காட்ட வேண்டும்.

சவுதி அரேபியா

* சவுதி அரேபியாவில் ஆண்கள் நாய், பூனையுடன் தெருவில் நடப்பது குற்றம். அதனை வைத்துக் கொண்டு எதிரில் வரும் பெண்களிடம் பேசும்  சாக்கில் ஜொள்ளு விடும் வாய்ப்பு அதிகம் என்கிறது சட்டம்.

திபெத்-சீனா

* திபெத்-சீனா சட்டப்படி ஒரு புத்த துறவி, நிர்வாணம் பெற்று சாக விரும்பினால் அதற்கு விண்ணப்பித்து அனுமதி பெற்று பிறகு செய்தல் வேண்டும்.  இல்லாவிடில் சட்டப்படி நடவடிக்கை உண்டு.

- ராஜிராதா, பெங்களூரு.

Related Stories: