பார்க்கும் விழி நானுனக்கு

நன்றி குங்குமம் தோழி

Advertising
Advertising

பெருங்கூட்டத்தின் நடுவே சாலையைக் கடக்கும் போதும்... பேருந்து பயணத்தின் பரபரப்பிற்கு இடையிலும்... ரயில் பயணங்களின் தடதட ஓசையிலும்... ஏதாவது ஒரு தருணத்தில் பரிதாப எண்ணத்தோடு பார்வைக் குறையுடையோரைப் பார்த்துக் கடந்திருப்போம்… முனைகளில் சிவப்பு  வண்ணம் மிளிர ஊன்று கோல் பிடித்து, கண‌ நேரப் பொழுதுகளில் விழிகளில் பட்டு மறைகிறார்கள். இளம் வயதில் பள்ளிப் பாடத்திட்டத்தில், நாம் படித்த “விழிக்குறைபாடு உடையோரும்-கல் யானையும்” கதையினை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது.

கண் தெரியாத ஐந்து நபர்களில் முதலாமவர் யானையின் காலைத் தொட்டுப்பார்த்து, யானை ‘தூண் போல் உள்ளது’ எனவும், யானையின் துதிக் கையினை தொட்டுப்பார்த்த கண் தெரியாத இரண்டாமவர், யானை ‘உலக்கை போல்’ உள்ளது எனவும், யானையின் காதுகளை தடவிய மூன்றாமவர், இல்லை இல்லை யானை ‘முற‌ம் போல்’ உள்ளது எனவும், யானையின் வயிற்றைத் தடவிப் பார்த்த நான்காமவர் யானை பெரிய சுவற்றைப்போல் உள்ளது எனவும், யானையின் வாலைத் தடவிய கண் தெரியாத ஐந்தாம் நபர் யானை கனமான கயிறைப்போல் உள்ளது எனவும் கூறுவதாகச் சொல்லப்பட்ட இந்த கற்பனைக் கதை, நீதிபோதனைக்கானது என்றாலும், கண் பார்வை தெரியவில்லை என்றால் உலகம் எத்தனை இருள்  சூழ்ந்ததாய் மாறிவிடுகிறது என்பதை பால்ய காலத்தில் நமக்கு உணர்த்திச் சென்றது.

ஐம்புலன்களும் நமக்கு முக்கியம்தான் என்றாலும், அதில் மிகவும்  முக்கியமானது கண்கள். ஒரு பத்து நிமிடம் கண்களை மூடிக்கொண்டு இருட்டு அறைக்குள் இருந்து பார்த்தால் நம்மாலும் அந்த வலியினை உணர முடியும். அதை உணர்த்த  வள்ளுவன் தன் குறளில், ‘கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்துஇரண்டு புண்ணுடையர் கல்லாதவர்’ என கற்றலின் முக்கியத்துவத்தை உணர்த்த  கண்களோடு ஒப்பிட்டு இரண்டடியில் அழகாய் குறள் எழுதினார். என்றாவது நாம் யோசித்திருக்கிறோமா? தன்னைச் சுற்றிப் படர்ந்திருக்கும் சவால்  நிறைந்த இருட்டு உலகை இவர்கள் எப்படிக் கடக்கிறார்கள்?

தங்கள் எதிர்காலத்தை எப்படி கட்டமைக்கிறார்கள் என்று? நம்மைப் போலவே போட்டித்  தேர்வுகளை எதிர்கொள்கிறார்கள். இவர்கள் எப்படிப் படிக்கிறார்கள்? தேர்வுகளை எப்படி எழுதுகிறார்கள்? யார் இவர்களுக்கு உதவுகிறார்கள்? என்கிற  கேள்விகளோடு மாற்றுத்திறனாளர்களுக்காக தேர்வெழுதும் ‘ஸ்க்ரைப்’ என அழைக்கப்படுபவர்களைப் பற்றி அறிய முனைந்தேன். ஊசியால் துளைகள் இட்டு, தொடுதல் மூலமாக எழுத்துக்களை பயிலும் ப்ரெய்லி முறையில், அதற்கான சிறப்புப் பள்ளிகளில் பயிலும் பார்வைக்  குறைபாடுடையோர் ப்ரெய்லி படிக்கிறார்கள், எழுதுகிறார்கள்.

பார்வை இழந்த எல்லோருக்கும் இந்தச் சிறப்புப் பள்ளி வாய்ப்புக் கிடைப்பதில்லை.  மேலும் தேர்வுகளில் ப்ரெய்லி முறை பயன்பாட்டில் இல்லை. தாங்கள் படித்ததை விடைத் தாளில் எழுத அடுத்தவர்களின் உதவியை எதிர்கொள்ள  வேண்டிய நிலையிலே விழிக்குறைபாடு உடையோர் இன்றும் உள்ளனர். இவர்களுக்காக விழிகளாக இருந்து இவர்களது வாழ்வில் கல்வி ஒளியை  ஏற்றுபவர்களே ‘ஸ்க்ரைப்’ என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் எப்படி தங்களை ஸ்க்ரைப்பாக அர்ப்பணிக்கிறார்கள் என்பதை அறிய  கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஸ்க்ரைப் ஆர்கனைசராக செயல்படும் பொன் மீனாட்சியிடம் பேசியபோது...“ஸ்க்ரைப்பாக செயல்படுவதில் எனக்கு நிறைய  மகிழ்ச்சி உள்ளது.

இது முழுக்க முழுக்க சமூக சேவை தொடர்பான செயல். நான் எம்.காம். வரை படித்துள்ளேன். என் கணவர் செய்யும் எக்ஸ்போர்ட் தொழிலில்  கன்சல்டன்டாகவும் உள்ளேன். எப்போதும் எதையாவது செய்துகொண்டே இருப்பேன். சமூக சேவையில் ஈடுபட நினைத்து செய்தித் தாள்களை  பார்த்தபோது ஸ்க்ரைப் தேவை என வந்த விளம்பரத்தைப் பார்த்து நானே அதில் என்னை விரும்பி இணைத்துக் கொண்டேன். தற்போது ஸ்க்ரைப்  என்பதையும் தாண்டி அவர்களை ஒன்றிணைக்கும் கோ-ஆர்டினேட்டராகவும் பொறுப்பில் இருக்கிறேன்.

சமூக மனப்பான்மை, பொறுமை,  எதிர்பார்ப்பின்மை இவையே இதற்கான தகுதி. பணத்திற்காக யாரும் இதில் பணியாற்ற வருவதில்லை. தேர்வுத் தாளில் நாம் எழுதுவதுதான் அவர்களின் எதிர்காலத்தையே தீர்மானிக்கும். எனவே ஸ்க்ரைப்பாக வருபவர்களின் எழுத்து மிகவும் தெளிவாக இருக்க வேண்டும். தமிழில் தேர்வு எழுதப் போகிறார்கள் என்றால், தமிழ் நன்றாக எழுதத் தெரிய வேண்டும். ஆங்கிலம் என்றால் ஆங்கிலத்தில் எழுத்துப் பிழையின்றி எழுத படிக்கத் தெரியவேண்டும். சிலநேரம் தேர்வு எழுதச் செல்லும் பாடத்திட்டம் பற்றி போதிய அறிவுத்திறன் இல்லாமல் எழுதச் செல்லும்போது, பார்வைக் குறைபாடுடையோர் சொல்வதை பொறுமையாகக் கேட்டு நிதானமாக எழுத வேண்டும்.

இதில் பொறுமைதான் மிகமிக முக்கியம். மிகவும்  கவனமாகவும் செயல்பட வேண்டும். செவிக் குறைபாடுடையோர், வாய் பேசமுடியாதவர்கள் தேர்வுகளை அவர்களே எழுதிக்கொள்வார்கள். பார்வை குறைபாடு டையோருக்கு மட்டுமின்றி, மஸ்குலர் டிஸ்லெக்ஸியா தாக்கம் உடையோர், இயங்கவே முடியாத ஒரு சில மாற்றுத்திறனாளர்களுக்காகவும் நாங்கள் தேர்வு எழுதுகிறோம். பார்வைக் குறைபாடுடையோர் அவர்களாகவே தேர்வுகளை எழுதுவது சாத்தியமற்றது. அவர்கள் சொல்லும் விடையை எங்கள் விரல்கள் அப்படியே எழுதும். அவர்களின் விழிகளாக நாங்கள் செயல்படுகிறோம்.

இதில் 100 சதவிகிதம்  விழிக்குறைபாடு உடையோர் மற்றும் குறைந்த அளவு பார்வை உடையவர் என இரண்டு பிரிவினருக்காகவும் எழுதச் செல்கிறோம். தேர்வு நடைபெறும்  அறைக்குள் சென்றதும், அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வினாத்தாளில் உள்ள கேள்விகளை அவர்களுக்குப் படித்துக் காட்டுவோம். அவர்கள் அதை  புரிந்து விடையை சொல்லும்வரை பொறுமையாக இருந்து அவர்கள் சொல்வதைக் கேட்டு அப்படியே எழுதுவோம். எந்தப் பாடத்தை பார்வை குறைபாடு  உள்ளவருக்காக எழுதப் போகிறோமோ, அதே பாடப்பிரிவை ஸ்க்ரைப்பாகச் செல்பவர்கள் முக்கியப் பாடமாக எடுத்து படித்திருக்கக் கூடாது.

உதாரணத்திற்கு தமிழ் இலக்கியம் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழ் இலக்கியத்தை முக்கியப் பாடமாக எடுத்துப் படித்தவர்கள் தேர்வு எழுதச்  செல்லக் கூடாது. பி.எட். படித்தவர்கள் பி.எட். மாணவர்களுக்கு தேர்வு எழுதக் கூடாது. விலங்கியல் படித்தவர்கள் விலங்கியல் பாடத்திற்கு ஸ்க்ரைப்பாக செல்லக்  கூடாது. ஆனால் வரலாறோ அல்லது வேறு பாடத்தையோ எழுதலாம். பார்வை இழந்தோர் தேர்வை எழுதும்போதே எங்களிடம், கருப்பு மை கொண்ட  பேனாவால் தலைப்பு எழுதுங்கள். மற்ற செய்திகளை நீல வண்ணப் பேனாவில் எழுதுங்கள்.

பொருளடக்கத்தை ஒரு கட்டம் போட்டு எழுதுங்கள்  எனவும் அறிவுறுத்துவார்கள். சிலவற்றை சப் டைட்டில் எனத் தெளிவாகச் சொல்லிவிடுவார்கள். எந்த வினாவை நடுவில் இருந்து தொடங்கி எழுத  வேண்டும், எதை விடைத்தாளின் ஓரத்தில் இருந்து துவங்க வேண்டும், எதை இரண்டாகப் பிரித்து எழுத வேண்டும் என எல்லாவற்றையும் தேர்வு  எழுதும்பொழுதே நமக்கு விளக்குவார்கள். படம் வரைந்து விளக்க வேண்டிய வினாவாக இருந்தால் பெரும்பாலும் அதை சாய்ஸில் தவிர்த்து  விடுவார்கள்.

வரைபட வினாக்களுக்கு வரைபடத்தின் மேல், கீழ், வலது இடது, நடுவில் எனப் பகுதிகளைப் பிரித்துச் சொல்லுவார்கள். ஆனால் பின்பாய்ண்டை  தெளிவாகச் சொல்வது அவர்களுக்கு கடினம். பல நேரங்களில் பள்ளிகளில் நடக்கும் காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளுக்கும் பார்வை  இழந்தோருக்காக தேர்வு எழுத வேண்டியது இருக்கும். சில நேரங்களில் காலையில் ஒரு தேர்வு, மதியம் ஒரு தேர்வு எனக் கூட தொடர்ந்து  எழுதுவோம். சில நேரங்களில் நாம் படித்துக் காட்டும் கேள்வியினை சரியாகப் புரிந்து கொள்ளாமல் அவர்கள் பதில் சொன்னால், பொறுமையாக  அவர்களிடம் இதில் கேள்வி இப்படி உள்ளது.

நீங்கள் சொல்லும் பதிலை நான் பதிலாக எடுத்துக் கொள்ளலாமா என ஒரு முறை கேட்டுவிட்டு  அவர்கள் சொல்லும் பதிலை எழுதத் தொடங்குவோம்.  பார்வைக் குறைபாடுடையோர் சொல்வதை அப்படியே விரைவாக எழுத அவர்களுக்கு அரைமணி நேரம் கூடுதலாக தேர்வில் வழங்கப்படுகிறது. 10, 12  வகுப்புத் தேர்வு மற்றும் சில அரசு பொதுத் தேர்வுகளுக்கு அரசே ஸ்க்ரைப்களை நியமிக்கிறார்கள். ஒருசில தேர்வில் சில மாற்றுத் திறனாளர்களுக்காக  சிறப்பு அனுமதி பெற்று, அதற்கென உள்ள பிரத்யேக அடையாள அட்டைகளைக் காட்டி, தாங்கள் விரும்பும் நபர்களை தேர்வு எழுத அழைத்துச் செல்லும் சிறப்பு அனுமதியும் இதில் உண்டு.

எல்லா ஊர்களிலுமே ஸ்க்ரைப் என அழைக்கப்படும் தன்னார்வலர்கள் உள்ளனர். இவர்களை  இணைப்பதற்கான அமைப்புகளும் அனைத்து ஊர்களிலும் உண்டு. பள்ளிகளுக்குத் தேர்வு எழுதச் செல்வோர், கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு  தேர்வெழுதச் செல்வோர், போட்டித் தேர்வுகளுக்கு தேர்வு எழுதச் செல்வோர் என எல்லோரும் ஒருவரோடு ஒருவர் இந்த அமைப்பில் தொடர்பில்  இருப்போம். இதற்கென ஒருங்கிணைப்பாளர்களும் உண்டு. தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், வரலாறு என எங்களுக்குள் பாடப் பிரிவுகளைப் பிரித்து யாருக்கு  எப்படிப்பட்ட ஸ்க்ரைப் தேவை என அறிந்து, அதை வழங்குவோம்.

எந்தத் தேர்விற்கு, எந்த நாளில், எப்போது வர முடியும் என்பதை முன்கூட்டியே சொல்லிவிட்டால், அதற்கேற்ப அவர்களைப் பயன்படுத்திக் கொள்வோம். ஸ்க்ரைப்பாகத் தேர்வெழுத ஒருவர் சம்மதித்துவிட்டால், சரியான நேரத்திற்கு  தவறாமல் வந்துவிடவேண்டும். அதில் ஏதேனும் குழப்பம் விளைவித்தால், கடைசி நேர பதற்றம் ஏற்படும். இந்தக் குழப்பங்களைத் தவிர்க்க நாங்கள்  இதற்கென செயலி ஒன்றையும் உருவாக்கி வைத்துள்ளோம். செயலி மூலமாக ஸ்க்ரைப்புகளை இணைக்கும் முயற்சியிலும் இருக்கிறோம். மொபைல்  செயலி இருவருக்கும் இணைப்பு பாலமாகச் செயல்படுகிறது.

நீண்ட தூரம் வெவ்வேறு ஊர்களுக்கு தேர்வெழுதச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால், அந்த ஊர்களில் உள்ள ஸ்க்ரைப் கோ-ஆர்டினேட்டர்களை  தொடர்புகொண்டு அங்கேயே ஸ்க்ரைப்புகளை ஏற்பாடு செய்து கொடுத்துவிடுவோம். ஸ்க்ரைப்புக்கான தேவை மிகவும் அதிகமாகவே இருக்கிறது.  கல்லூரி இளைஞர்கள், பட்ட மேல் படிப்பு படிப்பவர்கள், வீட்டில் இருப்பவர்கள், பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள், தன்னார்வத் தொண்டு  நிறுவனங்களில் இருப்பவர்கள் என எல்லாத் தரப்பினரும் ஸ்க்ரைப் பணிக்கு விருப்பம் தெரிவித்து, சேவை மனப்பான்மையுடன் வருகிறார்கள்.

மிகவும் பொறுப்பாகவும் செயல்படுகிறார்கள். இவர்கள் தேர்வு எழுதுவதோடு, பார்வை இழந்தோருக்கான ரெக்கார்ட் வேலைகளையும், அவர்கள் படிப்பதற்கான  பாடங்களை தங்கள் குரல்களிலும் பதிவு செய்து ஆடியோ புத்தகமாகத் தருகிறார்கள். தேர்வு நேரங்களில் ஒருசில கார்ப்பரேட் நிறுவனங்கள் தாங்களாகவே முன்வந்து, தங்கள் பணியாளர்களை ஸ்க்கைரைப்பாக அனுப்புகிறார்கள்.  தேவையைப் பொருத்து, மற்ற நிறுவனங்களிலும் அனுமதி பெற்றோ அல்லது வார இறுதி நாட்களிலோ தேர்வெழுத வருகிறார்கள்.

பார்வை  இழந்தவர்களுக்கு விழியாகச் செயல்படுவதன் மூலம், உதவி என்பதைத் தாண்டி நாம் அவர்களிடத்தில் நிறையக் கற்றுக் கொள்கிறோம். பள்ளி மற்றும்  கல்லூரி தேர்வுகளை நாம் அவர்களுக்காக மீண்டும் எழுதும்போது, நாம் படித்து மறந்துபோன பாடங்களும், நமக்குத் தெரியாத பாடங்களை  தெரிந்துகொள்ளும்போதும் நமக்கு மகிழ்ச்சியாகவே இருக்கும். பல நேரங்களில் அவர்களின் தன்னம்பிக்கை நம்மை சிலிர்க்க வைத்து, கூடுதல்  உத்வேகத்தை தரும். தேர்வு அறையில் அவர்கள் டென்ஷனாக இருந்தாலும் நாங்கள் மிகவும் நிதானமாகவே செயல்படுவோம்” என முடித்தார்.

- மகேஸ்வரி

Related Stories: