×

Diamer Bhasha அணை கட்டுமானப் பணிகள்...லடாக்கின் பெரும் பகுதிகள் நீரில் மூழ்கும் ஆபத்து: பாகிஸ்தான் அரசுக்கு இந்தியா கண்டனம்..!!

டெல்லி: (Diamer Bhasha) டயாமர் பாஷா அணை கட்டுமானப் பணிகள் மேற்கொண்டுள்ளதற்காக பாகிஸ்தான் அரசுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. அணை கட்டப்பட்டால் காஷ்மீர், லடாக்கின் பெரும் பகுதிகள் நீரில் மூழ்கும் ஆபத்து இருப்பதாக இந்தியா தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தியாவின் யூனியன் பிரதேசங்களான ஜம்மு மற்றும் காஷ்மீர், லடாக் ஆகியவற்றின் நிலப்பகுதியை பாதிக்கும் வகையில் பாகிஸ்தான் அரசு டயாமர் பாஷா அணைக்கான கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகிறது.  இதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பாகிஸ்தான் ஆளுமையின் கீழுள்ள காஷ்மீர் பகுதியில் இதற்கான அடிக்கல் நாட்டும் பணி கடந்த 1998ம் ஆண்டிலேயே நடந்தது.

இந்நிலையில் கடந்த 2013ம் ஆண்டின்படி இதன் திட்ட மதிப்பு ரூ.1,400 கோடியாகும்.  இந்த நிலையில், மெகா நீர்மின் திட்டத்திற்கான கட்டுமான பணியை அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் நேற்று தொடங்கி வைத்துள்ள நிலையிலோ இதற்கு சீனாவும் ஆதரவு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி மத்திய வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தி தொடர்பு அதிகாரி அனுராக் ஸ்ரீவஸ்தவா இன்று கூறும்பொழுது, சட்டவிரோத ஆக்கிரமிப்பின் கீழ் இந்திய பகுதிகளில் மாற்றங்களை மேற்கொண்டு வரும் பாகிஸ்தானின் முயற்சிகளுக்கு நாங்கள் கண்டனம் தெரிவிக்கிறோம்.

பாகிஸ்தானின் டயாமர் பாஷா அணையால், இந்தியாவின் யூனியன் பிரதேசங்களான ஜம்மு மற்றும் காஷ்மீர், லடாக் பகுதிகளில் அமைந்த பெருமளவு நிலப்பகுதிகள் நீரில் மூழ்கி விடும். எந்தவித உரிமையும் இல்லாத பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்பின் கீழுள்ள இந்திய நிலப்பகுதிகளில் சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளால் மேற்கொள்ளப்படும் இதுபோன்ற அனைத்து வகையான திட்டங்களுக்கு எதிராகவும், தொடர்ச்சியாக நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன் கவலையும் தெரிவித்து வருகிறோம் என கூறினார்.

Tags : Diamer Bhasha Dam ,government ,flooding ,Ladakh ,India ,Pakistani ,Government of Pakistan , Diamer Bhasha Dam, Construction, Government of Pakistan, India, Condemnation
× RELATED ஒன்றிய அரசு குறித்து அமெரிக்கா மீண்டும் விமர்சனம்