×

சாலை விபத்துகளில் இறந்த 9 நபர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம்: முதல்வர் உத்தரவு

சென்னை: சாலை விபத்துகளில் இறந்த 9 நபர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், விழுப்புரம் மாவட்டம், பாதிரிகிராமம் அருகே சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை கிராமத்திலிருந்து, சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் வாகனம், கட்டுப்பாட்டை இழந்து, விபத்துக்குள்ளானதில், வாகனத்தில் பயணம் செய்த திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த முருகன், முருகராஜ், ஸ்ரீமுருகன், மலர், முத்து அனிஷா மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் ஆகிய ஆறு நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில், வடகாட்டுப்பட்டி அருகே ஏற்பட்ட சாலை விபத்தில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மிதுன்கிஷோர், அரவிந்த் மற்றும் பரத் ஆகிய மூன்று நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் ஒரு சிறுவன் மற்றும் ஒரு சிறுமி காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சிறுவர்கள் இரண்டு பேரும் விரைவில் பூரண குணமடைய இறைவனை வேண்டுவதாக முதல்வர் தெரிவித்துள்ளார். மேற்கண்ட சாலை விபத்துகளில் உயிரிழந்த 9 நபர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 50,000/- ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 25,000/- ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.



Tags : persons ,families ,road accidents ,Road accident ,Chief Minister ,CM , Road accident, relief, CM
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...