இந்தியா முழுதிலுமுள்ள இளைஞர்கள் பலரும் திருக்குறளைப் படித்துப் பயனுருவர் என நம்புகிறேன் : பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!!

டெல்லி : திருக்குறள் அதி அற்புதமான ஊக்குவிப்பு நூலாகும் என பிரதமர் மோடி தமிழில் ட்வீட் செய்துள்ளார். என் ஜன்னலுக்கு வெளியே என்ற தலைப்பில், குமுதம் புத்தகத்தில் வெளிவந்த தமது கட்டுரையை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். கடந்த ஜூலை 3ம் தேதி சீனா ஆக்கிரமிக்க முயன்ற லடாக் எல்லையில் பிரதமர் மோடி ராணுவ வீரர்களை சந்தித்தார். எல்லை நிலவரங்களை ஆய்வு செய்த பிரதமர் மோடி ராணுவ வீரர்களிடையே பேசுகிறபோது அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் திருக்குறளையும் மேற்கோள் காட்டி பேசினார்.

வீரர்கள் மத்தியில் பேசிய பிரதமர், படை வீரருக்கான பண்புகள் பற்றி திருவள்ளுவர் எழுதிய திருக்குறளை இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்.

    மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்,

    எனநான்கே ஏமம் படைக்கு

எனத் திருவள்ளுவர் கூறியுள்ளார். அதாவது, வீரம், மான உணர்வு, முன்னோர் சென்ற வழியில் நடத்தல், தலைவனின் நம்பிக்கையைப் பெறுதல் ஆகிய நான்கும் படை வீரனுக்குத் தேவையான பண்புகள் எனத் திருக்குறளில் குறிப்பிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

இதையடுத்து பிரதமர் மோடியின் லடாக் பயணம் தொடர்பான கட்டுரை குமுதம் இதழில் வெளியிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில், குமுதம் இதழின் கட்டுரை பக்கங்களை ட்விட்டரில் இணைத்த பிரதமர் மோடி, திருக்குறள் அதி அற்புதமான ஊக்குவிப்பு நூலாகும். உயரிய சிந்தனைகள், உன்னதக் குறிக்கோள்கள், ஊக்கம் தரும் கருத்துக்களை உள்ளடக்கிய பொக்கிஷமாகும். தெய்வப்புலவர் திருவள்ளுவரின் எழுத்துக்கள், நம்பிக்கையும் ஒளியும் பரப்பிடும் வல்லமை வாய்ந்தவை. இந்தியா முழுதிலுமுள்ள இளைஞர்கள் பலரும் திருக்குறளைப் படித்துப் பயனுருவர் என நம்புகிறேன்என்றார்.

Related Stories: