×

பாதிப்புகளை சமாளிக்க நம்மிடம் ஒரே மந்திரம் மட்டும்தான் இருக்கிறது: பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: ‘‘ கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சமாளிக்க, இப்போதுள்ள ஒரே மந்திரம், ‘திறன். மறுதிறன் மற்றும் திறன் மேம்பாடு’ மட்டும்தான்,’’ என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்தியாவில் இளைஞர்களின் திறனை அடையாளம் காணவும், அவர்களின் திறனை அதிகரிக்கவும் பிரதமர் மோடியால், ‘திறன் இந்தியா திட்டம்’ கடந்த 2015ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 15ம் தேதி, ‘இளைஞர் திறன் தினம்,’ கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில், திறன் இந்தியா திட்டத்தின் ஐந்தாம் ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, காணொலி மூலமாக பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

கொரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கும் இந்த சூழலில் திறன், மறுதிறன், திறன் மேம்பாடு என்ற மந்திரமே பொருத்தமானதாக இருக்கும். திறன் என்பது முடிவு இல்லாதது. தனித்துவமானது. இது மற்றவர்களிடம் இருந்து உங்களை வேறுபடுத்தி காட்டுகின்றது. வேகமாக மாறிவரும் உலகில் திறமையானவர்கள் லட்சக்கணக்கில் கணக்கில் தேவைப்படுகின்றனர். குறிப்பாக, சுகாதார சேவைகளில் மிகப்பெரிய சாத்தியக்கூறுகள் உள்ளன. கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தி வரும் இந்த நேரத்தில் இந்த கேள்வி மிகவும் முக்கியமானது. என்னிடம் ஒரே ஒரு பதில்தான் உள்ளது. அந்த மந்திரம் என்னவென்றால் திறன், மறுதிறன் மற்றும் திறன் மேம்பாடு என்பதேயாகும்.

புதிய சூழ்நிலைக்கு ஏற்றபடி நமது திறன்களை வளர்த்துக் கொள்வது அவசியமாகும். திறன் என்பது தனிப்பட்டவர்களுக்கு சொந்தமானது. திறன் தான் இளைஞர்களை இயக்கும் சக்தியை கொண்டுள்ளது. புதிய திறனை வளர்த்துக் கொண்டால் வாழ்க்கையில் நீங்கள் முன்னேறலாம். ஊரடங்கின்போது தங்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்பிய புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சிறப்பு திறனுடன் கிராமங்களை புத்துயிர் பெறச்செய்ய தொடங்கியுள்ளனர். ஒருவர் பள்ளிக்கு வண்ணம் தீட்டுகிறார். ஒருவர் வீட்டைக் கட்டுகிறார். இவ்வாறு அவர் பேசினார்.

* ஐநா கூட்டத்தில் நாளை உரை
ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலின் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இதில், பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலமாக உரையாற்ற உள்ளார். ‘கோவிட்- 19க்கு பின் உலகின் சீர்திருத்த பன்முகத்தன்மை,’ என்பது இந்த ஆண்டுக்கான தலைப்பாக கொடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த 2016ம் ஆண்டு ஜனவரில் நடந்த ஐநா.வின் 70ம் ஆண்டு பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் கூட்டத்திலும் காணொலி மூலமாக மோடி உரையாற்றி இருக்கிறார்.

Tags : Modi ,speech , To deal with the vulnerabilities, the only mantra, Prime Minister Modi talks
× RELATED ராஜஸ்தான் பிரசாரத்தில் வெறுப்பு...