ரூ.33,737 கோடி முதலீடு ஜியோவில் 7.7% பங்குகளை வாங்குகிறது கூகுள் நிறுவனம்

புதுடெல்லி: ஜியோவில் 7.7 சதவீத பங்குகளை ரூ.33,737 கோடிக்கு கூகுள் நிறுவனம் வாங்குவதாக, முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 43வது ஆண்டு பொதுக்கூட்டம்  மும்பையில் நேற்று நடந்தது. இதில், ஆன்லைனில் ஜியோ மீட் மூலம் பங்குதாரர்களிடையே ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி பேசியதாவது: கடந்த ஏப்ரல் 22ம் தேதியில் இருந்து இதுவரை ரிலையன்ஸ் ஜியோவில் 25.24 சதவீத பங்குகள், ரூ.1,18,318.45  கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.

பேஸ்புக் உள்ளிட்ட ஏராளமான நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. இந்நிலையில், கூகுள் நிறுவனமும் ஜியோவில் முதலீடு செய்கிறது. இந்த நிறுவனம் ஜியோவில் 7.7 சதவீத பங்குகளை ரூ.33,737 கோடிக்கு வாங்க உள்ளது. இத்துடன் சேர்த்து மூன்று மாதங்களுக்குள்ளாகவே ரிலையன்ஸ் ரூ.2,12,809 கோடியை திரட்டியுள்ளது. கூகுள் மற்றும் ஜியோ நிறுவனம் இணைந்து மலிவு விலையில் 5ஜி ஸ்மார்ட் போன்களை உருவாக்க உள்ளன என்றார். மேலும், ஸ்மார்ட்போனுடன் இணைத்து பயன்படுத்தக்கூடிய, 3டி முறையில் வீடியோ கான்பரன்சிங்கில் உரையாற்ற உதவும் ஜியோ கண்ணாடி உள்ளிட்டவையும் அறிவிக்கப்பட்டன.

* ஜியோ மீட் ஆப்ஸ் 50 லட்சம் பதிவிறக்கம்

கொரோனா ஊரடங்கில் பல நிறுவனங்கள் வீட்டில் இருந்து வேலை நடைமுறையை செயல்படுத்த துவங்கின. ஊழியர்களுடன் உரையாட ஜூம் ஆப்ஸ் பயன்படுத்தப்பட்டது. ஆனால், சீனாவுக்கு எதிரான நிலைப்பாடு காரணமாக, ஜூம் ஆப்சை பலர் புறக்கணிக்க துவங்கினர். இந்த நிலையில் இந்தியாவிலேயே பிரத்யேக ஆப்ஸ்கள் இதற்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட்டன. இந்த வகையில் வீடியோ கான்பரன்சிங் முறையில் உரையாற்ற சமீபத்தில்  ஜியோ மீட் ஆப்ஸ் அறிமுகம் செய்யப்பட்டது. ஆன்டிராய்டு போன், ஐபோன், விண்டோஸ் மற்றும் மேக் மற்றும் இணைய செயலிகளிலும் இதனை பயன்படுத்த முடியும். ஒரே நேரத்தில் 100 பேர் வரை பங்கேற்று உரையாடலாம். இந்த ஆப்ஸ் அறிமுகம் ஆகி சில நாட்களிலேயே 50 லட்சம் பேர் இதனை பதிவிறக்கம் செய்துள்ளனர் என முகேஷ் அம்பானி கூறினார்.

Related Stories: