×

கேரள தங்க கடத்தல் ராணி சொப்னாவின் வலையில் ஐஏஎஸ் விழுந்தது எப்படி?: அதிர்ச்சி தகவல்கள்

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த மாதம் வரை ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் மிக நேர்மையான அதிகாரிகளின் பட்டியலில் இருந்தார். இதனால்தான், கடந்த 4 வருடங்களுக்கு முன் இடதுசாரி கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தபோது சிவசங்கரை முதல்வர் பினராய் விஜயன் தனது முதன்மை செயலாளராக நியமித்தார். முதல்வரின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர் என்பதால் அனைத்து அதிகாரிகளும் இவரைப் பார்த்து பயந்தனர். இவர், தங்க கடத்தல் ராணி சொப்னாவின் வலையில் எப்படி விழுந்தார் என்பதுதான் கேரளாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

சொப்னாவின் தந்தை சவுதி மன்னரின் அரண்மனையில் முக்கிய பொறுப்பில் பணிபுரிந்ததால், சொப்னா பிறந்தது, வளர்ந்தது எல்லாமே அபுதாபியில் தான். சிறுவயதிலிருந்தே மன்னர் குடும்பத்தினருடன் இவருக்கு நெருக்கம் ஏற்பட்டது. ஆங்கிலம், அரபி உள்பட பல மொழிகள் சரளமாகத் தெரியும். இதை பயன்படுத்தி2016ல் தூதரகத்தில் பணிக்கு சேர்ந்தார். எவ்வளவு சிரமமான பணியாக இருந்தாலும் குறுகிய காலத்தில் செய்து முடித்து, உயர் அதிகாரிகளின் நம்பிக்கையை பெற்றார். பிறகு தனது அதிகாரத்தை பயன்படுத்தி கேரள அரசின் உயர் அதிகாரிகளை வலையில் வீழ்த்த தொடங்கினார். அவர்களில் ஒருவர்தான் சிவசங்கர். பின்னர், சொப்னாவின் வீட்டுக்கு எந்த நேரத்திலும் செல்லும் அளவுக்கு அவர் மிக நெருக்கமானார்.

திருவனந்தபுரத்தில் அரசு தலைமைச் செயலகத்திற்கு மிக அருகே ஒரு அடுக்குமாடி குடியிருப்பில்  தனது செல்வாக்கை  பயன்படுத்தி சொப்னாவுக்கும் ஒரு பிளாட்டை சிவசங்கர் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். இங்குதான் தங்கம்  கடத்தலுக்கான சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அதற்கான ஆவணங்களை என்ஐஏ கைப்பற்றியுள்ளது. எனவே, இந்தத் தங்கக் கடத்தலில் சிவசங்கருக்கு கண்டிப்பாக  தொடர்பு இருக்கும் என சுங்க இலாகாவினர் உறுதியாக நம்புகின்றனர். 9 மணி நேர விசாரணையில், சிவசங்கர் கூறிய எந்த பதிலும் விசாரணை அதிகாரிகளுக்கு திருப்தியை தரவில்லை. இதனால், எந்த நேரத்திலும் மீண்டும் அவரிடம் விசாரணை நடத்த வாய்ப்பு உள்ளது.  அவரது செல்போனை பறிமுதல் செய்துள்ளனர். அதிலுள்ள முக்கிய ஆவணங்களை சேகரித்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.    

* அஜித் தோவல் ஆர்வம் காட்டுவது ஏன்?
பெரும்பாலும் என். ஐ.ஏ நேரடியாக எந்த வழக்கையும் பதிவு செய்து விசாரணை நடத்துவது கிடையாது. ஆனால் திருவனந்தபுரம் தங்க கடத்தல் வழக்கை என்.ஐ.ஏ நேரடியாக வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது. இதற்கு மத்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் நிர்பந்தம் காரணம் என கூறப்படுகிறது. கேரளாவில் அஜித் தோவல் போலீஸ் அதிகாரியாக இருந்தபோது, 1971ல் தலச்சேரி பகுதியில் பெரும் மதக் கலவரம் வெடித்தது. இதை ஒடுக்கும் பணியில் தோவலை அன்றைய முதல்வர் கருணாகரன் நியமித்தார். அப்போது, இந்த கலவரத்துக்கு காரணமான ஒரு முக்கிய அரசியல் கட்சி தலைவரை தோவல் துப்பாக்கி முனையில் மிரட்டி கலவரத்தில் இருந்து பின்வாங்க வைத்ததாகவும் கூறப்படுகிறது. பின்னாளில், தோவலுக்கு அந்த தலைவர் பலவகையில் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. அவரை பழிவாங்குவதற்காகவே இந்த வழக்கில் தோவல் நேரடியாக தலையிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

Tags : Kerala ,IAS , Kerala, gold smuggling, Rani Sopna, web, IAS fell, how ?, shocking information
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...