×

அழுகியவை முதல் சின்னாபின்னமான சடலம் வரை எவ்வளவோ பார்த்து இருக்கிறோம் ஆனா, இது மட்டும் பயமா இருக்கு: மயான தொழிலாளிகள் பீதி

நாடு முழுவதும் ஊரடங்கு, பொருளாதார மந்தநிலை, அனைத்து துறைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா, சடலங்களே வாழ்க்கை என்று வாழ்ந்து வரும் மயான தொழிலாளர்கள், சங்கு ஊதி மணி அடிப்பவர்கள், கல்லறை கட்டுபவர்கள் என மயான தொழிலுடன் தொடர்பு உடையவர்களையும் விட்டு வைக்கவில்லை. கொரோனா பீதியில் இவர்களும் உள்ளனர். சடலங்களோடு தினமும் வாழ்க்கையை நடத்தி வந்தாலும்,  தங்களுக்கும் குடும்பம் உண்டு, கொரோனா பற்றிய பயமும் இருக்கிறது என்று இந்த மயான தொழிலாளிகளும் வேதனை தெரிவித்து வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலத்தின் அவுரங்காபாத் நகரில் உள்ள புஷ்பநகரி இடுகாட்டில் சடலங்களை எரிக்கும் கோவிந்த் கெய்க்வாட் கூறுகையில், ``சடலங்களை கையாள்வது எங்களுக்கு பழகிப் போன ஒன்று. அழுகிய சடலங்கள், துண்டு துண்டாக படுகொலை செய்யப்பட்டவர்களின் சடலங்கள்.

கருகி கரிக்கட்டையாக வரும் சடலங்கள்.... இப்படி, எவ்வளவோ மோசமான சடலங்களை எல்லாம் பார்த்து இருக்கிறோம். ஆனால், இப்போது கொரோனாவால் இறந்தவர்களின் சடலங்கள் வருகிறது என்றால், குலை நடுங்குகிறது. மயானத்துக்குள் ஆம்புலன்ஸ் சத்தத்தை கேட்டாலே பயமாக இருக்கிறது. குழந்தைகளை இடுகாட்டு வளாகத்தில் விளையாட விடுவதில்லை. அவர்களை இடுகாட்டிற்குள் உள்ள வீட்டை விட்டு வெளியேற கூட அனுமதிப்பதில்லை. சடலங்களின் இறுதி சடங்கை முடித்த பின்னர், எப்படா கிருமிநாசினி தெளிக்க வருவார்கள் என்று காத்திருக்கிறோம். அவர்கள் வந்த பிறகே நிம்மதி பிறக்கிறது. ,’’ என்றார்.

இதே போல், பெகம்புரா மயானத்தில் பணயாற்றும் ராமு கெய்க்வாட் கூறுகையில், ``முன்பெல்லாம் சடலம் எரியும் வரை அருகிலேயே இருப்போம். பயமே இருக்காது. இப்போது, கொரோனா நோயாளியின் சடலம் வருவதாக தகவல் கிடைத்ததும், அதை எரிப்பதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டு, சடலம் வந்ததும் வீட்டிற்குள் சென்று கதவை மூடிக் கொண்டு குழந்தை குட்டிகளுடன் இருக்கிறோம். கடந்த நான்கு மாதங்களாக இப்படி தான் செய்து வருகிறோம். தலை, கை, கால் வெட்டப்பட்டவை என பல்வேறு நிலையில் சடலங்களை கண்ட போது கூட அஞ்சவில்லை.

ஆனால், கண்ணுக்கு தெரியாத இந்த கொரோனா எங்களை அச்சுறுத்தி வருகிறது. எங்களால் குழந்தைகளுக்கும் தொற்று பரவி விடுமோ என்ற அச்சத்தில் இருக்க வேண்டியுள்ளது. இதற்கு முன்பு, இது போல பயந்தது கிடையாது,’’ என்றார்.
‘ஒவ்வொரு தனி மனிதனின் வேதனைகளும், சோதனைகளும் அவன் சாவுடன் முடிவுக்கு வந்து விடுகிறது. அவன் கொரோனாவால் பாதிக்கப்பட்டவனாக இருந்தாலும் சரி, இல்லை சாதாரண முறையில் இறந்தாலும் சரி, தற்போதைய சூழலில் தனி மனிதனின் சாவு, சடலங்களையே வாழ்வாதாரமாக கொண்டிருக்கும் வெட்டியானின் வாழ்க்கையில் பயத்தை, அச்சத்தை ஏற்படுத்தி இருப்பது, வேதனை கலந்த வருத்தமான உண்மை என்பதே நிதர்சனம்,’ என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
கொரோனாவால் இறந்தவர்களின் சடலங்கள் வருகிறது என்றால், குலை நடுங்குகிறது. மயானத்துக்குள் ஆம்புலன்ஸ் சத்தத்தை கேட்டாலே பயமாக இருக்கிறது’’.


Tags : corpses , From the rotten, to the filthy corpse, to the fear of seeing how much
× RELATED இஸ்ரேலில் இசை நிகழ்ச்சியை குறிவைத்து தாக்குதல் : 260 சடலங்கள் மீட்பு!!