×

பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் இன்னும் 10 நாட்களில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல்

கிருஷ்ணகிரி: தமிழகத்தில் இன்னும் 10 நாட்களில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று கிருஷ்ணகிரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் பொதுமக்களுக்கு சுய கட்டுப்பாடு அவசியம். எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தர வேண்டும். இன்னும் 10 நாட்களில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்கு பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைப்பு தர வேண்டும். என்றார். கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகளுடனான கலந்தாய்வு கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பேசுகையில், தமிழகத்தில் புதிய தொழிற்சாலைகள் வருவதற்கு நிலம், மின்சாரம் போன்ற உதவிகளை அரசு செய்து கொடுக்கிறது. உடனே அனைத்து அனுமதிகளும் கிடைப்பதற்கு, சிங்கிள் விண்டோ சிஸ்டம் ஏற்படுத்தி சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்றார்.

* கமலுக்கு நோய்பற்றி தெரியாது
சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியில், ஆரம்பசுகாதார நிலையங்களில் போதிய கருவிகள் இல்லை எனவும், டாக்டர்கள் பற்றாக்குறை உள்ளதாகவும், அங்கேயே கொரொனாவுக்கு சிகிச்சை அளிக்கலாமே என்று கூறும் நடிகர் கமலுக்கு இந்த நோய் பற்றி தெரியாது. இதனை பரிசோதனை செய்யும் டாக்டர்கள் பிபி கிட் அணிந்து மிகுந்த பாதுகாப்புடன் செல்ல வேண்டும். எல்லா ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பரிசோதனை செய்தால் நோய் பரவிவிடும். எனவே அறிகுறி இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு வந்துவிடவேண்டும் என்றார்.

* நகைக்கடனை நிறுத்தவில்லை
முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியில், தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன், விவசாயக்கடன் நிறுத்தப்பட்டுள்ளதாக வரும் தகவல்கள் தவறானது. ஏற்கனவே டெபாசிட் செய்தவர்கள் பணத்தை கேட்டு வருகின்றனர். அவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும். எனவே அதற்கேற்ற முறையில் நிர்ணயிக்கப்பட்ட அளவு மட்டுமே கடன் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

Tags : Edappadi Palanisamy ,public , Public, full cooperation, within 10 days, corona, under control, action, Chief Edappadi Palanisamy, Information
× RELATED இரட்டை இலை சின்னம் கோரி தேர்தல்...