×

மாணவர்களுக்கான எப்-1, எம்-1 விசா கட்டுப்பாடுகளை ரத்து செய்தது அமெரிக்கா: போராடிய பல்கலைக்கழகங்களுக்கு தயாநிதி மாறன் எம்பி வாழ்த்து

சென்னை: மாணவர்களுக்கான எப்-1, எம்-1 விசா கட்டுப்பாடுகளை ரத்து செய்தது அமெரிக்க அரசு. இதையடுத்து, போராடி வென்ற பல்கலைக்கழகங்களுக்கு மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுபற்றிய விவரம் வருமாறு: கடந்த வாரம் ஜூலை 6ம் தேதி அமெரிக்க அரசு எப்-1, எம்-1 விசா மாணவர்கள் ஆன்லைன் கல்வி முறையை பின்தொடர்ந்தால் நாட்டை விட்டு வெளியேற வேண்டியிருக்கும் என்று திடீரென அறிவித்தது. இது இந்தியாவிலிருந்து அமெரிக்கா சென்று மேல்படிப்பு பயிலும் மாணவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தியதோடு அவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்திருந்தது.
பல பல்கலைக்கழகங்கள் மாணவர் நலன் கருதி ஆன்லைன் கல்வி முறையில் இலையுதிர்கால செமஸ்டர் வகுப்புகளை தொடங்க இருந்தன.

இச்சூழ்நிலையில் அமெரிக்க அரசு அரசின் இந்த திடீர் அறிவிப்பு அங்குள்ள கல்வி நிலையங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல்கலைக்கழகங்கள் அமெரிக்க அரசுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்திருந்தது. கொரோனா காலத்தில் பாதுகாப்பாக வகுப்புகளை ஆன்லைன் கல்வி முறையில் துவங்க இருந்த பல்கலைக்கழகங்களை கட்டாயப்படுத்தி நேர்முக வகுப்புகளை நடத்த வைக்கிற இந்த முடிவு, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடல்நலம் கருதாமல் அவர்களை கொரோனா தொற்று அபாயத்திற்கு ஆளாக்கும் என ஹார்வர்டு மற்றும் எம்.ஐ.டி பல்கலைக்கழகங்கள், அமெரிக்க அரசுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்தன. பல்கலைக்கழகங்கள் மற்றும் மாணவர்களின் கடுமையான ஆர்ப்பாட்டங்களைக் கண்டதும், அமெரிக்க அரசு விசா விதிகளில் செய்த மாற்றங்களை ரத்து செய்து பின் வாங்கியது.

இதன் மூலம் அமெரிக்காவில் உயர் கல்வியைத் தொடரும். சர்வதேச மாணவர்களின் எதிர்காலத்தையும், ஆரோக்கியத்தையும் கருத்தில் கொண்டு கொரோனா காலத்தில் அவர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாதபடி நடவடிக்கை எடுத்தது பல்கலைக்கழகங்களுக்கு கிடைத்த வெற்றி எனவும் இதுதொடர்பாக மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் இந்திய பிரதமருக்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே ஒரு கடிதம் எழுதி இருந்தேன். அதில் மாணவர்களின் நலன் காக்க உடனடியாக இந்திய அரசாங்கம் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்கமாறு கேட்டுக் கொண்டேன் என மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் குறிப்பிட்டுள்ளார்.

* ரஷ்யாவில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்க கடிதம்
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு மத்திய சென்னை எம்பி தயாநிதி மாறன் எழுதியுள்ள கடிதத்தில், ‘‘தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ரஷ்யாவின் வோல்கோகிராட் நகரில் சிக்கியுள்ளனர். அவர்கள் ரஷ்யாவிலிருந்து வந்தே பாரத் மிஷன் மூலம் தமிழகம் திரும்புவதற்காக அங்குள்ள இந்திய தூதரகத்திடம் பலமுறை விண்ணப்பித்தும் இந்தியாவிற்கு திரும்புவதற்கான வசதிகளை பெற முடியவில்லை. அங்கு கொரோனா சூழலால் நிச்சயமற்ற தன்மை நிலவுவதோடு, நாடு திரும்புவது தொடர்பாக தூதரகத்திலிருந்து தெளிவான தகவல்கள் எதுவும் கிடைக்காத நிலையில் அவர்களும், அவர்களது குடும்பத்தினரும் கடுமையான மனஅழுத்தத்திற்கு உள்ளாகி கடும் நெருக்கடியில் உள்ளனர். அங்கு சிக்கியுள்ள மாணவர்களின் அவலநிலையை உணர்ந்து அவர்களை தமிழகத்திற்கு பாதுகாப்பாக திரும்ப அழைத்து வருவதற்கான உரிய ஏற்பாடுகளை விரைந்து செய்யுமாறு தங்களை கேட்டுக்கொள்கிறேன்’’ என குறிப்பிட்டுள்ளார்.

Tags : universities ,Dayanidhi Maran ,M-1 ,F-1 ,USA , Student, F-1, M-1 Visa Restriction, Canceled, USA, Struggling University, Dayanidhi Maran MP, Greetings
× RELATED திமுக வேட்பாளர்களான தயாநிதி மாறன்,...