×

மணல் திருட்டை தடுத்ததால் திமுக ஊராட்சி தலைவரை கொலை செய்தோம்: கொலையாளிகள் வாக்குமூலம்

சென்னை: ஆவடியை அடுத்த திருநின்றவூரில் மணல் திருட்டை தடுத்தததால், திமுக ஊராட்சி தலைவரை வெட்டி கொலை செய்தோம் என கைதான முக்கிய குற்றவாளி உள்பட 6 பேர் பரப்பரப்பு வாக்குமூலம் கொடுத்து உள்ளனர். ஆவடி அடுத்த திருநின்றவூர், கொசவன்பாளையம் ஊராட்சி தலைவராக இருந்தவர் பரமகுரு (38). வழக்கறிஞர். திமுவை சேர்ந்தவர். நேற்று முன்தினம் மாலை பரமகுரு கொசவம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட அருந்ததிபாளையம் பஸ் நிறுத்தம் அருகே அவரை 6 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்தனர். புகாரின் அடிப்படையில் திருநின்றவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 தனிப்படை அமைத்து தேடினர்.

இது தொடர்பாக பரமகுரு கொலை வழக்கில் திருநின்றவூர், மேட்டு தெருவை சேர்ந்த ராஜேஷ் (35), அய்யப்பன் (28), முத்து (28), அதே பகுதி ராமர் கோவில் தெருவை சேர்ந்த அப்புன் என்ற ரவிக்குமார் (34), அதே பகுதியை சேர்ந்த கலா (28), கோமதிபுரத்தை சேர்ந்த சரவணன் (28) ஆகிய 6 பேர்களுக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து, தனிப்படை போலீசார் முக்கிய குற்றவாளி ராஜேஷ் உள்பட 6 கூட்டாளிகளை போலீசார் நேற்று மதியம் கைது செய்தனர். விசாரணையில், ராஜேஷ் தலைமையில் கூட்டாளிகள் கொசவன்பாளையம் பகுதியில் உள்ள கூவம் ஆற்றில் மாட்டு வண்டிகளில் மணல் திருடி வந்து உள்ளனர்.

மேலும், கடந்த மாதம் சரக்கு வாகனம் ஒன்றை வாங்கி அதிக அளவு மணலை திருடவும் முயற்சி செய்து உள்ளனர். இதனை அறிந்த ஊராட்சி தலைவர் பரமகுரு, ராஜேஷ் மற்றும் கூட்டாளிகளை கண்டித்து உள்ளார். மேலும், அவர்களிடம் மணல் திருடினால் கலெக்டர், போலீசாரிம் புகார் கொடுப்பேன். மேலும், உங்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்துவேன் என கூறியுள்ளார். இதனால், அவர்களுக்கு இடையே முன் விரோதம் ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜேஷ் தலைமையிலான கூட்டாளிகள் ஒன்று கூடி, பரமகுரு உயிருடன் இருந்தால் மணல் திருட முடியாது.

இதனால், அவர்கள் அவரை கொலை செய்ய வேண்டும் என்று திட்டம் தீட்டியுள்ளனர். இதனையடுத்து, நேற்று முன்தினம் அருந்ததிபாளையத்தில் பரமகுரு தனியாக இருப்பதை அறிந்து ராஜேஷ் தலைமையிலான கூட்டாளிகள் சென்று கொலை செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. மேலும், போலீசார் 6 பேரையும் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று இரவு புழல் சிறையில் அடைத்தனர். இதற்கிடையில் ஊராட்சி தலைவர் பரமகுரு உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு, நேற்று மதியம் அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு, கொட்டாம்பேடு சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

Tags : panchayat leader ,DMK ,killers , Sand theft, obstruction, DMK panchayat leader, murder, murderers, confession
× RELATED தூத்துக்குடி தொகுதியில் மீண்டும்...