×

பெரியபாளையத்தில் பெய்யும் மழையால் சேறும் சகதியுமான ஆரம்ப சுகாதார நிலையம்: சிமென்ட் சாலை அமைக்க கோரிக்கை

ஊத்துக்கோட்டை:பெரியபாளையத்தில் பெய்து வரும் மழையால், அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகம் சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. அதனால், வளாகத்தில் சிமென்ட் சாலை அமைத்து தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள், நோயாளிகள் கோரிக்கை வைத்துள்ளனர். எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு, பெரியபாளையம், தண்டுமாநகர், ஆத்துப்பாக்கம், தண்டலம், வடமதுரை, தும்பாக்கம், காக்கவாக்கம் உள்ளிட்ட 20 மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் கண், காது, மூக்கு, தொண்டை மற்றும்  பொது மருத்துவம், பிரசவம் போன்ற பல்வேறு சிகிச்சைகள் பெறுவதற்காக மக்கள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக அவ்வப்போது அடிக்கடி மழை பெய்து வருகிறது. இதனால், பெரியபாளையம் மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் தேங்கி மருத்துவமனை வளாகம் தற்போது சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால், அவரசத்துக்கு வரும் ஆம்புலன்ஸ்கள், நோயாளிகள் சுகாதார நிலையத்திற்கு உள்ளே சென்று வர கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும், கொசுக்கள் உற்பத்தியாகி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு நோய்கள் பரவும் வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, மருத்துவமனை வளாகத்தை சுற்றி இருக்கும் மழை நீரையும், சேற்றையும் அகற்றி சிமென்ட் சாலை அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், நேயாளிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது குறித்து மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் கூறியதாவது:
பெரியபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பிரசவம் மற்றும் பொது சுகாதாரத்திற்கு சிகிச்சை பெற 20 கிராமங்களை சேர்ந்த மக்கள் வந்து செல்கிறோம். இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால்  மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் தேங்கி, சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால், மழைநீரிலும், சேற்றிலும் உருவாகும் கொசுவால் இங்கு வரும் நோயாளிகளுக்கு டெங்கு, வைரஸ் காய்ச்சல் போன்ற நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. மருத்துவமனை வளாகத்தை சுற்றி சிமெண்ட் சாலை அமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Primary Health Center ,Periyapalayam ,cement road , Periyapalayam, due to heavy rains, mudslides, primary health center, cement road, demand
× RELATED ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் விழிப்புணர்வு