×

விவசாயிகளுக்கு அங்ககச்சான்று

திருவள்ளூர்: திருவள்ளுர் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் அ.இளையராஜா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
தற்பொழுது அங்கக வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகள், தங்களது நிலத்தில் உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் இடுவதை தவிர்த்து, இயற்கை முறையில் தயாரிக்கும் எரு, மண்புழு உரம், பஞ்ச காவியா, இயற்கை பூச்சி விரட்டிகள் கொண்டு விவசாயம் செய்வதால் உற்பத்தி செய்யப்படும் உணவு பயிர்கள் பழங்கள், கீரைகள் மற்றும் காய்கறிகளுக்கு சந்தையில் நல்ல விலை கிடைப்பதுடன் சுற்றுச்சூழல் மாசடைவது குறைந்து மண் வளம் பெறுகிறது. தமிழ் நாட்டில் அங்ககச்சான்றளிப்பு அபீடா நிறுவனத்தின் வழிகாட்டுதல் மற்றும் அங்கீகாரத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அங்கக வேளாண்மையில் ஈடுபட்டுள்ளோர், அங்ககச்சான்று பெற தனி நபராகவோ, குழுவாகவோ அல்லது வணிக நிறுவனத்தின் பெயரிலோ பதிவு செய்துகொள்ளலாம். மேலும் கால்நடை வளர்ப்பு, தேனி வளர்ப்பு, வனப்பொருட்கள் சேகரிப்பு செய்பவர்களும் பதிவு செய்துகொள்ளலாம். பதிவு கட்டணம் ஒரு வருடத்திற்கு தனிநபர் சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.2700 ம், தனிநபர் பிற விவசாயிகளுக்கு ரூ.3200 ம், குழுவாக பதிவு செய்தால் ரூ.7200 ம், வணிக நிறுவனமாக பதிவு செய்தால் ரூ.9400 ம் வரைவோலை மூலம் கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் வருடத்திற்கு புதுப்பித்தல் கட்டணமாக மேற்குறிப்பிட்ட தொகையில் 25 சதவீதம் செலுத்த வேண்டும். ஆர்வம் உள்ள விவசாயிகள் இலால் பகதூர் சாஸ்திரி தெரு, பெரியகுப்பம், திருவள்ளூரில் உள்ள  விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் அலுவலகத்தையோ அல்லது விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று அலுவலர்களையோ அல்லது தங்கள் பகுதியில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுலவகங்களையோ தொடர்பு கொள்ளலாம்.   


Tags : Farmer, ankakaccanru
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...