×

அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் எடையாளம் ஊராட்சியில் 20 ஏக்கர் மேயக்கால் புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு: கண்டுகொள்ளாத அதிகாரிகள்

மதுராந்தகம்:அச்சிறுபாக்கம் ஒன்றியம் எடையாளம் ஊராட்சியில், 20 ஏக்கர் மேயக்கால் புறம்போக்கு நிலத்தை ஒரு குடும்பத்தினர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இது குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் கண்டுக்கொள்ளவில்லை என பொதுமக்கள் புலம்புகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில் எடையாளம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சி,  செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தின் எல்லையில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில், பழைய எடையாளம், புதிய எடையாளம் என இரண்டு கிராமங்கள் உள்ளன. இதில், புதிய எடையாளம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள், அனைவருமே விவசாயிகள். மற்றவர்கள், விவசாயம் சார்ந்த தொழில் செய்து வருகின்றனர். குறிப்பாக, கால்நடைகள் வளர்ப்பது இவர்களின் முக்கிய தொழில்.

இந்த கிராமத்தில் சுமார் 100 ஏக்கர் அரசுக்கு சொந்தமான மேயக்கால் புறம்போக்கு நிலம் உள்ளது. இதில் ஆடு, மாடுகளின் மேய்ச்சலுக்காகவே உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த சிலர் இந்த மேயக்கால் புறம்போக்கு நிலத்தின் முக்கிய பகுதிகளில் சுமார் 20 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள், இந்த புறம்போக்கு நிலத்தை தாண்டி பட்டா நிலங்களுக்கு செல்லும் குறிப்பிட்ட பாதையை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து வருகின்றனர். இதன் காரணமாக, கிராமத்தில் புறம்போக்கு நில ஆக்கிரமிப்பாளர்கள் மூலமாக தேவையற்ற பிரச்னைகள் எழ வாய்ப்புள்ளது என பொதுமக்கள் புலம்புகின்றனர். எனவே, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கூறுகின்றனர்.  

இந்நிலையில், அதே கிராமத்தை சேர்ந்த பாமக மாநில நிர்வாகி குமரவேல், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர், மதுராந்தகம் வட்டாட்சியர் மற்றும் அச்சிறுப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இந்த புகார் குறித்து அறிந்த ஆக்கிரமிப்பாளர்கள் புகார்தாரரான குமாரவேலுக்கு சொந்தமான நிலத்திலிருந்து பனைமரங்கள், மாங்கன்றுகள், மூங்கில் கன்றுகள் போன்றவற்றினை இரவோடு இரவாக பிடுங்கி எறிந்தும், வெட்டி வீசியதாகவும் கூறப்படுகிறது. மேலும், இது குறித்தும் அச்சிறுப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, வருவாய் துறையினரும், காவல் துறையினரும் உரிய நடவடிக்கை மேற்கொண்டு அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டுக  வேண்டுமென புகார்தாரர் மற்றும் கிராம மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். இது குறித்து அச்சிறுப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணனிடம் கேட்டபோது, ‘இது முழுக்க முழுக்க அரசுக்கு சொந்தமான மேய்க்கால் புறம்போக்கு நிலம். எனவே, இதன்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது வருவாய்த்துறையினர். எனவே, மதுராந்தகம் வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியருக்கு இது சம்பந்தமாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி, வருவாய்த்துறையினர் இதுகுறித்த நடவடிக்கையினை மேற்கொள்வார்கள். என்றார்.

* பெரும் பிரச்னை வேண்டாமே
கடந்த வாரத்தில் திருப்போரூர் அருகே செங்காடு கிராமத்திற்கு பொதுவான நிலத்தை ரியல் எஸ்டேட் நிறுவனம் ஆக்கிரமித்து, அவர்களின் இடத்திற்கு செல்ல பாதை அமைத்தது. அதனால், அங்கு பெரும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதே நிலை எடையாளம் கிராமத்தில் நிகழாமல் இருக்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.

Tags : land , Achchirapalli Union, Edayalam Panchayat, 20 acres, Mayakkal outlying land, occupation, authorities
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!