தமிழக பாஜக அணிகளின் புதிய நிர்வாகிகள் பட்டியல் நடிகர்கள் மற்றும் வீரப்பன் மகளுக்கு பதவி: எல்.முருகன் அறிவிப்பு

சென்னை: தமிழக பாஜக அணிகளின் புதிய நிர்வாகிகள் பட்டியலில் நடிகர்கள் மற்றும் வீரப்பன் மகளுக்கு கட்சியில் பதவி வழங்கி நேற்று தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக பாஜகவில் மாநில நிர்வாகிகள் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் அதிரடியாக மாற்றப்பட்டனர். அதில் கட்சியின் துணை தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், அணிகளின் தலைவர்கள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில் அணிகள் மற்றும் பிரிவுகளின் மாநில நிர்வாககளின் பட்டியலை நேற்று பாஜ தலைவர் எல்.முருகன் வெளியிட்டார்.

இதில் பாஜ இளைஞர் அணி மாநில துணைதலைவர்களாக மூர்த்தி (விழுப்புரம்), சிவபாலன் (கன்னியாகுமரி), அரசுரங்கேஷ், வித்யா வீரப்பன் ( கிருஷ்ணகிரி கிழக்கு) சிவசங்கிரி (திருப்பூர் வடக்கு), வீ. குமார் ( செங்கல்பட்டு), மாரிசக்கரவர்த்தி (மதுரை நகர்), வேல்முருகன் (திருநெல்வேலி), மாநில பொருளாளர் ஜி.கே.சுரேஷ் கருணா (மத்திய சென்னை மேற்கு), மாநில பொதுச்செயலாளர்கள் ராஜேஷ்குமார், ஆத்ம கார்த்திக், ராஜ்குமார், மாநிலசெயலாளர்கள் ராகுல் டி சுரணா, ஜெ.வி.அருண், சங்கரபாண்டி, ஆர்த்திக், வீரதிருநாவுக்கரசு, எஸ்.கார்த்திக், எஸ்.கதிரவன், டாக்டர் பிரீத்தி லட்சுமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் இளைஞர் அணி மாநில செயற்குழு உறுப்பினர்களாக 27 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதைப்போல் பல்வேறு அணிகளின் நிர்வாகிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

பாஜ மாநில செயற்குழு சிறப்பு அழைப்பாளராக ஆர்.எம்.ஆர்.ஜானகிராமன், நடிகர் விஜயகுமார், இயக்குநர் கஸ்தூரி ராஜா, கங்கை அமரன் உள்ளிட்ட 13 பேர் மாநில செயற்குழு சிறப்பு அழைப்பாளர்காக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் மாநில ஓபிசி அணி துணை தலைவராக நடிகர் ஆர்.கே.சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநில செயற்குழு உறுப்பினர்களாக நடிகர் ராதாரவி உள்ளிட்ட 32 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். பாஜ இளைஞர் அணி துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ள வித்யா வீரப்பன் சந்தன கடத்தல் வீரப்பன் மகள் ஆவார். இவர் கடந்த பிப்ரவரி மாதம் பாஜ தேசிய பொதுச் செயலாளர் முரளீதர் ராவ் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: