ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியது செப்.17ல் இன்ஜினியரிங் கவுன்சலிங்: தரவரிசை பட்டியல் செப்.7ம் தேதி வெளியீடு

சென்னை: தமிழகத்தில் அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் பொறியியல் (இன்ஜினியரிங்) கல்லூரிகளில் சேர்வதற்கான ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையை உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் நேற்று தொடங்கி வைத்தார். ஆன்லைன் விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 16ம் தேதி வரை பெறப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதையடுத்து இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை கவுன்சலிங் செப்டம்பர் 10 மற்றும் 17ம் தேதிகளில் தொடங்கும் என்றும் அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார். அண்ணா பல்கலைக் கழகம், அரசு பொறியியல் கல்லூரிகள், இணைப்பு பெற்ற பொறியியல் கல்லூரிகளில் நடத்தப்படும் பிஇ, பிடெக் பட்டப் படிப்புகளில் இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.

இதற்கான அனுமதியை அகில இந்திய தொழில் நுட்பக் கல்வி கழகம் அண்ணா பல்கலைக் கழகத்துக்கு அளித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், மேற்கண்ட படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கடந்த வாரம் அறிவித்து இருந்தார். இதையடுத்து, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் திட்டத்தை உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் நேற்று மாலை தொடங்கிவைத்து பேசியதாவது:

இன்ஜினியரிங் படிப்பில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் இன்று மாலை 6 மணி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதி தொடங்கி வைக்கப்படுகிறது. இதில் தொழில் கல்வி பிரிவு, பொதுப்பிரிவு மாணவர்கள் இன்றே விண்ணப்பிக்கலாம். ஆகஸ்ட் 16ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பின்னர் அசல் சான்றுகளை இம்மாதம் 31ம் தேதி முதல் ஆகஸ்ட் 20ம் தேதி வரை பதிவேற்றம் செய்யலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வசதியாக தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு 52 சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் மாணவர்கள் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.  

கடந்த ஆண்டு 46 மையங்கள் அமைக்கப்பட்டன. இந்த ஆண்டு மொத்தம் 465 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. சான்றிதழ் சரிபார்ப்பு மாணவர்கள் வீட்டில் இருந்தே செய்துகொள்ளும் வகையில் மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளன. சேவை மையங்கள் மூலம் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகஸ்ட் 24ம் தேதி முதல் செப்டம்பர் 1ம் தேதி வரை  நடக்கும். முன்னாள் ராணுவ வீரர்கள், மாற்றுத் திறனாளிகள் போன்றோர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு நேரில் வரவேண்டியதில்லை. விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் சேர விரும்பும் மாணவர்கள் மட்டும் சான்று சரிபார்ப்புக்கு நேரில்வர வேண்டும்.

கடந்த ஆண்டு பொறியியல் படிப்பில் 62.6 சதவீதம் மாணவர்கள் சேர்க்கை இருந்தது. இந்த ஆண்டு அதைவிட கூடுதலாக மாணவர்கள் சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அவற்றை சுத்தம் செய்த பிறகு கல்லூரிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். வகுப்புகள் தொடங்குவது குறித்து மத்திய மனித வள மேம்பாட்டுத்துறைக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். அதற்கான பதில் இன்னும் வரவில்லை. இதற்கிடையே கல்லூரிகள் திறப்பது, இறுதி செமஸ்டர் தேர்வு நடத்துவது, வகுப்புகள் தொடங்குவது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் ஆய்வு முடிவுகள் வந்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போது பொறியியல் கல்லூரிகளுக்கான சேர்க்கை குறித்து அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் இயங்கும் கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறித்து விரைவில் அறிவிக்கப்படும். கல்லூரி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை பொறுத்தவரையில் 3 தவணையாக வாங்கலாம் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதன்படி கட்டணம் வசூலிக்கப்படும் என்பதால் அதற்கு நிறைய அவகாசம் இருக்கிறது. பொறியியல் மாணவர் சேர்க்கை தொடர்பான விவரங்கள், ஆன்லைன் தொடர்பான விவரங்கள், சேவை மையங்கள் குறித்த பட்டியல்கள் அனைத்தும், www.tneaonline.org என்ற இணைய தளத்தில் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார்.

மாணவர்கள் சேர்க்கை விவரம்

* ரேண்டம் எண்கள் ஆகஸ்ட் 21ம் தேதிவெளியிடப்படும்.

* செப்டம்பர் 7ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.

பொறியியல் சேர்க்கை கவுன்சலிங்

* முதற்கட்டமாக மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், விளையாட்டு  வீரர்கள் ஆகியோருக்கு செப்டம்பர் 10ம் தேதிமுதல் 14ம் தேதிவரை நடக்கும்.

* பொதுப்பிரிவினருக்கான கவுன்சலிங் செப்டம்பர் 17ம் தேதிமுதல் அக்டோபர் 6ம் தேதி வரை நடக்கும்.

* தொழிற்பாடப்பிரிவு மாணவர்களுக்கு செப்டம்பர் 10ம் தேதிமுதல் 14ம் தேதிவரை நடக்கும்.

* துணைக் கவுன்சலிங்(இருபிரிவு) இணைய தளம் மூலம் அக்டோபர் 8ம் தேதிமுதல் 12ம் தேதி வரை நடக்கும்.

* எஸ்சி(ஏ) காலியிடம் மற்றும் எஸ்சி பிரிவினருக்கான கவுன்சலிங் இணைய தளம் மூலம் அக்டோபர் 14ம் தேதி மற்றும் 15ம் தேதி வரை நடக்கும்.

* கவுன்சலிங் அக்டோபர் 15ம் தேதியுடன் முடிவடையும்.

Related Stories: