வெளிநாட்டு மாணவர்களின் விசா கட்டுப்பாடு ரத்து : பல்கலைகள் எதிர்ப்புக்கு பணிந்தது அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசு!

வாஷிங்டன்: அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் விசாவை ரத்து செய்யும் உத்தரவை அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசு திரும்ப பெற்றுள்ளது. ஆன்லைன் மூலமாக மட்டும் நடத்தப்படும் பாடங்களில் சேர்ந்துள்ள வெளிநாட்டு மாணவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அமெரிக்க அரசு கொண்டு வந்த புதிய கட்டுப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா அச்சம் காரணமாக அமெரிக்காவில் உள்ள பெரும்பான்மை பல்கலைக் கழகங்கள் ஆன்லைன் வகுப்புகளுக்கு மாறி வருகின்றன.

இதையடுத்து கடந்த 6ம் தேதி அமெரிக்காவில் ஆன்லைன் வகுப்புகளுக்கு மாறும் வெளிநாட்டு மாணவர்களின் விசாக்களை அந்நாட்டு குடியுரிமைத்துறை ரத்து செய்து உத்தரவிட்டது. இதற்கு பல்வேறு பல்கலைக் கழகங்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, விசா விதிமுறைகளில் சில திருத்தங்களை அமெரிக்க அரசு மேற்கொண்டது. இதில் சமாதானம் அடையாத ஹார்வார்டு பல்கலைக் கழகம் மற்றும் எம்.ஐ.டி., மாசாசூசெட்ஸ் கல்வி நிறுவனம் ஆகிய பல்கலைக் கழகங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

அமெரிக்காவின் 17 மாநில அரசுகளும் அடுத்தடுத்து வழக்குகளை தொடர்ந்திருந்தன. இந்நிலையில் கடும் எதிர்ப்புகள் காரணமாக வெளிநாட்டு மாணவர்களின் விசாக்களை ரத்து செய்யும் ஆணையை அமெரிக்க அரசு திரும்ப பெற்றுள்ளது. இதுகுறித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசு, நீதிமன்றத்தில் எழுத்து பூர்வமான அறிக்கை ஒன்றையும் தாக்கல் செய்திருக்கிறது. விசா ரத்து அறிவிப்பு திரும்ப பெறப்பட்டுள்ளதால் பிற நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்து அமெரிக்காவில் பயிலும் மாணவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Related Stories: