திராவிட இயக்க சாதனைகளை கற்பிக்கும் முயற்சியாக திராவிட பள்ளி தொடங்க திட்டம்!: சுபவீரபாண்டியன் தகவல்!!!

சென்னை: திராவிட இயக்கத்தின் வரலாற்று சாதனைகளை அடுத்து தலைமுறைக்கு எடுத்து செல்லும் நோக்கில் திராவிட பள்ளி தொடங்கப்பட உள்ளதாக திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுபவீரபாண்டியன் கூறியுள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திராவிட பள்ளி மூலம் திராவிட இயக்கத்தின் வரலாறு, கோட்பாடுகள், சாதனைகள் ஆகியவை இணையம் மற்றும் அஞ்சல் வழியாக மாணவர்களுக்கு கற்றுத்தரப்படும் என்று கூறியுள்ளார்.

தந்தை பெரியார் பிறந்த தினமான செப்டம்பர் 17ம் தேதியில் திராவிட பள்ளி தொடங்கப்பட உள்ளதாக சுபவீரபாண்டியன் தெரிவித்திருக்கிறார். 18 வயதுகள் நிரம்பிய ஆண், பெண், திருநங்கைகள் என ஆண்டிற்கு 300 பேரை இத்திராவிட பள்ளியில் சேர்த்து, தேர்வு நடத்தி சான்றிதழ் வழங்கப்படும் எனவும் சுபவீரபாண்டியன் தெரிவித்துள்ளார். திராவிடப் பள்ளி என்ற பெயரில் உள்ள இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், திராவிடம் என்பது ஒரு கட்டத்தில் இனத்தை குறித்தது, பிறகு நிலத்தை குறித்தது, பின்னர் மொழியை குறித்தது. ஆனால் இன்றைக்கு திராவிடம் என்பது நடைமுறையில் சமூக நீதியை தான் குறிக்கிறது. எல்லா சொற்களுக்கும் அகராதியில் இருந்து பொருள் தேட முடியாது. திராவிடம் என்றால் சமூக நீதி, சுயமரியாதை, தீந்தமிழ் உணர்ச்சி மற்றும் சமத்துவ பாதையாகும். இந்த உண்மையை நாம் அடுத்த தலைமுறைக்கு கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது. அதற்காகவே திராவிட இயக்க தமிழக பேரவை, திராவிட பள்ளியை தொடங்க முடிவெடுத்துள்ளது என தெரிவித்தார்.

Related Stories: