கோவை மாவட்டத்தில் உள்ள மதுக்கரை காவல் நிலையத்தில் 2 சிறப்பு உதவி ஆய்வாளர்கள் உட்பட 7 போலீசாருக்கு கொரொனா தொற்று உறுதி...!!

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள மதுக்கரை காவல் நிலையத்தில் 2 சிறப்பு உதவி ஆய்வாளர்கள் உட்பட 7 போலீசாருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் கொரொனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணிக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், கோவை மதுக்கரை காவல் நிலையத்தில் பணியாற்றும் 2 சிறப்பு உதவி ஆய்வாளர்கள் உட்பட 7 காவலர்களுக்கு, கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு, அருகில் உள்ள திருமண மண்டபத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. போலீசாரின் குடும்பத்தினர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள இருப்பதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் ஏற்கனவே துடியலூர், போத்தனூர், சூலூர் ஆகிய காவல் நிலையங்கள் கொரோனாவால் மூடப்பட்ட நிலையில், நான்காவது காவல் நிலையமாக மதுக்கரை காவல் நிலையமும் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பெங்களூருவில் 570-க்கும் மேற்பட்ட போலீசாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதைப் போல், கோவையிலும் அதிகப்படியான போலீசாருக்கு தொற்று ஏற்படுமோ என்ற அச்சம் போலீசார் மத்தியில் எழுந்துள்ளது.

Related Stories: