×

அடுத்த ஆறு மாதங்களில் வங்கிகளின் வாராக்கடன் அதிகரிக்கும்: ரகுராம் ராஜன் எச்சரிக்கை

மும்பை: அடுத்த ஆறு மாதங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு வங்கிகளின் வாராக் கடன் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார். பொருளாதார ஆய்வுக்கான தேசியக் கவுன்சில் (NCAER) நடத்திய 2020ஆம் ஆண்டுக்கான இந்தியப் பொருளாதார கொள்கைகள் குறித்த மாநாட்டில் பொருளாதார வல்லுநர் ரகுராம் ராஜன் காணொளிக் காட்சி மூலமாக கலந்துகொண்டு உரையாற்றினார்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கால் ஏராளமான தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் அனைத்தும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளன. வங்கிகளில் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் திணறி வருகின்றன. இதனால் அடுத்த ஆறு மாதங்களில் வங்கிகளில் வாராக்கடன் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. நாம் மோசமான சூழலில் இருக்கிறோம். விரைவாக இந்தப் பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்து தொடக்க நிலையிலேயே நடவடிக்கை எடுப்பது நல்லது.

உதவி தேவைப்படும் மக்களுக்கு நிதி உதவி சென்று சேருவதில் மிகப்பெரிய சிக்கல் நிலவுகிறது. இந்தியப் பொருளாதாரத்தில் விவசாயம் மட்டுமே ஆறுதல் அளிக்கும்படி சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. வேளாண்துறையில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்கள் நீண்ட காலத்துக்குப் பேசும்படி இருக்க வேண்டும். பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், எண்ணெய் வித்துகள், தானியங்கள், வெங்காயம், உருளைக் கிழங்கு ஆகியவற்றை ஏற்றுமதி செய்ய அரசு அனுமதித்திருப்பது வரவேற்கத்தக்கது என்று கூறியுள்ளார்.



Tags : Banks ,Raghuram Rajan , Raghuram Rajan, bad debt
× RELATED 2047ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த...