×

உறவினர்களுடன் முருகன், நளினியை பேச அனுமதிக்க மத்திய அரசுக்கே அதிகாரம்...! சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்

சென்னை: வெளிநாடுகளில் உள்ள உறவினர்களுடன் முருகன், நளினியை பேச அனுமதிக்க மத்திய அரசுக்கே அதிகாரம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. நளினியின் தாய் பத்மா தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இலங்கையில் உள்ள தாய் மற்றும் லண்டனில் உள்ள சகோதரியிடம் , வேலூர் சிறையில் உள்ள  முருகன் மற்றும் நளினி வீடியோ கால் பேச சிறை நிர்வாகம் மறுப்பதாக நளினியின் தாயார் பத்மா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  சென்னை உயா்நீதிமன்றத்தில் நளினியின் தாயாா் பத்மா தாக்கல் செய்த ஆட்கொணா்வு மனுவில் கூறியதாவது; முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு எனது மகள் நளினியும், மருமகன் முருகனும் கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகின்றனா்.

வேலூா் சிறையில் இருவரும் இருந்து வந்த நிலையில் கடந்த வாரம் முருகனின் தந்தை இலங்கையில் காலமானாா். இறந்த தனது தந்தையின் உடலை காணொலி காட்சி மூலம் காண அனுமதி வழங்கக் கோரிய முருகனின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்க மறுத்து விட்டது. எனவே இலங்கையில் உள்ள முருகனின் தாயாா் சோமனியம்மாளிடமும், லண்டனில் உள்ள அவரது மூத்த சகோதரியிடமும் தினமும் 10 நிமிடங்கள் கட்செவியில் உள்ள காணொலி வசதி மூலம் பேச அனுமதிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா். இந்த வழக்கை நீதிபதிகள் என்.கிருபாகரன், வேலுமணி ஆகியோா் காணொலிக் காட்சி மூலம் விசாரித்தனா். அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், செல்லிடப்பேசியில் காணொலிக் காட்சி மூலம் பேச அனைத்து கைதிகளுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் நளினிக்கும், முருகனுக்கும் அனுமதி மறுக்கப்படுகிறது.

வெளிநாட்டில் உள்ள உறவினா்களுடன் பேச எந்த சட்டமும் தடை விதிக்கவில்லை என வாதிட்டாா். அப்போது அரசுத்தரப்பில் ஆஜரான மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன், நளினி மற்றும் முருகனை வெளிநாடுகளில் உள்ள உறவினா்களுடன் பேச அனுமதிப்பது தொடா்பாக மத்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு தமிழக அரசு கடிதம் அனுப்பியுள்ளதாகத் தெரிவித்தாா். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் மத்திய அரசுக்கு அனுப்பிய கடிதத்தை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கில் மத்திய அரசை எதிா்மனுதாரராக சோ்த்து, விசாரணையை ஜூலை 15 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா். இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்களுடன் நளினி, முருகனை பேச அனுமதிப்பதற்கு மத்திய அரசுக்குத்தான் அதிகாரம் உள்ளது என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்த தகவலைத் தொடர்ந்து மத்திய அரசு 24-ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிடப்பட்டு, வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Tags : government ,Murugan ,relatives ,Nalini ,Government of Tamil Nadu ,Chennai I Court ,Tamil Nadu ,Chennai ,iCourt , Relatives, Murugan, Nalini, Central Government, Chennai, iCourt, Government of Tamil Nadu
× RELATED இ-பாஸ் நடைமுறையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்: எல்.முருகன்