எண்ணெய் குழாய் அமைக்க கையகப்படுத்தும் நிலத்துக்கு 100% இழப்பீடு தரப்படும்: கிருஷ்ணகிரியில் முதல்வர் பழனிசாமி பேச்சு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் சுய உதவிக் குழுவினருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்தாய்வு நடத்தினார். பின்னர் பேசிய அவர்; கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மிகவும் குறைவாக உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 11,919 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொரோனா நோய் தொற்றைத் தடுப்பதற்கான அனைத்தும் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கு தேவையான கவச உடைகள், உபகரணங்கள் போதிய அளவு வாங்கப்பட்டுள்ளன.

கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சையளிக்க கூடுதலாக ஆயிரத்திற்கும் அதிகமான மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முகக்கவசம், கவச உடைகள் ஆகியவை கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு போதிய அளவு வழங்கப்பட்டுள்ளது. வீடு வீடாக சென்று கொரோனா பாதிப்பை கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் 10 நாட்களில் கொரோனா பாதிப்பு குறைய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் கொரோனாவை குறைக்க முடியும். சென்னை மாநகராட்சி பகுதியில் 600க்கும் மேற்பட்ட காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகின்றன.

கொரோனா நிவாரணப் பணிக்கு ரூ.10,000 கோடி செலவு

தமிழக அரசு கொரோனா நிவாரணப் பணிகளுக்கு ரூ.10,000 கோடி செலவிட்டுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு தானியம் வழங்க ரூ.215.9 கோடியை மத்திய அரசு வழங்கியது. ஜன்தன் திட்டம், உணவு தானியம் கொண்ட கடலை வழங்க மத்திய அரசு நிதி அளித்துள்ளது. கொரோனா காலத்தில் உணவு தானியத்துக்காக மத்திய அரசு ரூ.6,394 கோடி வழங்கி உள்ளது. எண்ணெய் குழாய் அமைக்க கையகப்படுத்தும் நிலத்துக்கு 100% இழப்பீடு வழங்கப்படும்.

நாள்தோறும் பல லட்சம் பேருக்கு அம்மா உணவகத்தில் உணவு வழங்கப்படுகிறது. தமிழகத்தில் மக்களின் வாழ்வாதாரத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு வழங்குகிறது. தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நோய் தொற்று குறைந்து வருகிறது.

நகைக்கடன் நிறுத்தப்படவில்லை

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்குவது நிறுத்தப்படவில்லை. அந்தந்த வங்கிகளின் நிதி கையிருப்பை பொருத்து நகைக்கடன் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கியில் டெபாசிட் செய்துள்ளவர்கள், பணம் எடுக்க வந்தால் சிக்கல் ஏற்படக்கூடாது. கூட்டுறவு வங்கி கடன்கள் நிறுத்தம் என்பது தவறான தகவல் எனவும் விளக்கம் அளித்துள்ளார்.

Related Stories: