×

சென்னை திருநின்றவூர் அருகே ஊராட்சி மன்ற தலைவர் கொல்லப்பட்ட வழக்கில் 4 பேர் கைது!!!

சென்னை: சென்னை திருநின்றவூர் அருகே ஊராட்சி மன்றத் தலைவர் பரமகுரு கொல்லப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்ய்யப்பட்டுள்ளனர். ஆவடியை அடுத்த திருநின்றவூர், கொசவன்பாளையம் ஊராட்சி தலைவர் பரமகுரு (38). வழக்கறிஞர். பூந்தமல்லி மேற்கு ஒன்றிய திமுக வழக்கறிஞரணி துணை அமைப்பாளராகவும் இருந்தார். இந்நிலையில், நேற்று மாலை பரமகுரு கொசவன்பாளையம் அருந்ததிபாளையத்தில் நடைபெறும் கால்வாய் பணிகளை நாற்காலியில் அமர்ந்து கவனித்து கொண்டிருந்தார்.

அப்போது, அவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. இதனையடுத்து, பரமகுரு செல்போனில் பேசிக்கொண்டே அங்கிருந்து நடந்து மெயின் ரோட்டுக்கு சென்றார். பரமகுரு, அருந்ததிபாளையம் பஸ் நிறுத்தம் அருகே வந்தார். அப்போது, 3 பைக்கில் வந்த மர்மக் கும்பல் அவரை வழிமறித்தது. பின்னர், அவரிடம் அந்த கும்பல், வாய்த்தகராறில் ஈடுபட்டனர். அதன்பிறகு, அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்து பரமகுருவை வெட்டியுள்ளனர். உடனே பரமகுரு அந்த கும்பலிடமிருந்து தப்ப நடுரோட்டில் ஓடியுள்ளார். அந்த கும்பல் அவரை விடாமல் ஓட, ஓட விரட்டி சரமாரியாக வெட்டினர்.

பொதுமக்களை பார்த்த அந்த கும்பல் அங்கிருந்து பைக்குகளில் தப்பி சென்றது. பின்னர், பொதுமக்கள் வந்தபோது பரமகுரு சம்பவ இடத்திலேயே  இறந்தது தெரியவந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவருக்கு ஷிபா என்ற மனைவியும், மகன், மகள் உள்ளனர்.  ஊராட்சி தலைவர் பரமகுரு வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கொசவம் பாளையம் முழுவதும் பரவியதால் பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கொலையாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி பூந்தமல்லி- திருநின்றவூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, போலீசார் மறியல் செய்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், போலீசார் போராட்டக்காரர்களிடம் கொலையாளிகளை விரைவில் கைது செய்வோம் என உறுதியளித்தனர். இதனையடுத்து, பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.  புகாரின் அடிப்படையில் திருநின்றவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடி வந்தனர். இந்நிலையில், அதே பகுதியில் செயல்பட்டு வந்த பெட்ரோல் பங்கில் பெருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், திருநின்றவூரை சேர்ந்த ராஜேஷ், அப்பு, அய்யப்பன் மற்றும் கலாநிதி ஆகிய 4 பேரும் தற்போது காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags : Panchayat leader ,Thiruninravur ,Chennai , 4 arrested in murder case of Panchayat leader near Thiruninravur, Chennai !!!
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...