கல்வான் பள்ளத்தாக்கில் ஆய்வு?: 2 நாள் பயணமாக நாளை மறுநாள் லடாக் செல்கிறார் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்..!!!

புதுடெல்லி: லடாக் எல்லைக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பயணம் மேற்கொள்ளவுள்ளார். கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் மாதம் 15,16ம் தேதிகளில் இந்திய, சீன ராணுவத்தினர் இடையே கடும்  மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். சீன தரப்பில் 45 பேர் இறந்ததாக கூறப்படுகிறது. எல்லை கட்டுப்பாடு கோடு தாண்டி இந்திய எல்லைக்குள் சீன ராணுவத்தினர் ஊடுருவ முயன்றதாலேயே இந்த வன்முறை  நிகழ்ந்ததாக மத்திய அரசு கூறி உள்ளது. இதன் காரணமாக லடாக் எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இரு தரப்பு ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, எல்லையில் குவிக்கப்பட்ட படைகளை விலக்கிக் கொள்வதாக முடிவு செய்துள்ளனர். ஆனாலும் கூட இந்தியா-சீனா உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. வர்த்தகம், தூதரக  ரீதியாகவும் சீனாவுக்கு பல்வேறு அழுத்தங்களை தர இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கிடையே, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் லடாக் பகுதியில் ஆய்வு செய்வதாக இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்ட நிலையில், முப்படை  தலைமை தளபதி பிபின் ராவத் லடாக் செல்வதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், பிரதமர் மோடி கடந்த 4-ம் தேதி காலை 9.30 மணிக்கு லடாக்கின் லே பகுதிக்கு வந்தடைந்தார்.  அங்கிருந்து விமானத்தில் பறந்தபடி, எல்லையில் உள்ள  நிலைமை மற்றும் பாதுகாப்பு சூழ்நிலைகளை ஆய்வு செய்தார்.

இதனை தொடர்ந்து, சீனா ராணுவம் எல்லையில் இருந்து பின்வாங்கியது. எல்லையில் அமைக்கப்பட்ட கூடாரங்கள் நீக்கப்பட்டது. 1 முதல் 2 கிலோ மீட்டர் தூரம் சீனா ராணுவம் பின்வாங்கியது. இதற்கிடையே, நேற்றும், இந்தியா-சீனா இடையே  ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான 4-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்நிலையில், 2 நாள் பயணமாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் லடாக் செல்லவுள்ளார். வரும் ஜூலை 17-18 தேதிகளில் லடாக் மற்றும் ஜம்மு & காஷ்மீருக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செல்கிறார். பாதுகாப்பு  அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் ராணுவ தலைமைத் தளபதி மனோஜ் முகுந்த் நாரவணேவும், உடன் செல்கிறார். பயணத்தின்போது, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், லடாக் எல்லை பகுதிகளை பார்வையிட உள்ளார். மேலும், ராணுவ  வீரர்களுடன் உரையாற்றவுள்ளதாகவும், மருத்துவமனையில் உள்ள வீரர்களை நேரில் சந்தித்து நலம் விசாரிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 4-ம் தேதி பயணம் செய்ய திட்டமிட்ட நிலையில், வரும் 17-ம் தேதி ராஜ்நாத் சிங்  பயணம் மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: