மங்கலத்தில் மணல் கொள்ளையால் மாயமான இடுகாடு

* சடலங்களை அடக்கம் செய்ய முடியாத அவலம்

* அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

வில்லியனூர்:  வில்லியனூர் அடுத்த மங்கலம் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள்  வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கான சுடுகாடு மற்றும் இடுகாடு சங்கராபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. யாரேனும் இறந்தால் ஆற்றங்கரையோரம் உள்ள சுடுகாடு, இடுகாட்டில் இறுதி சடங்கு நடத்தி எரிப்பதோ அல்லது புதைப்பதோ வழக்கம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன், இதன் அருகே மனைபிரிவு போடப்பட்டது. இதனால் இடுகாட்டுக்கு செல்லும் வழி குறுகியது. இந்த வழியில் புதர் மண்டி காடு போல் மாறியதால் பொதுமக்கள் இவ்வழியை பயன்படுத்துவது இல்லை. மாறாக, சுடுகாட்டின் அருகிலேயே புதைத்து விடுகின்றனர். சில நேரங்களில் எரிப்பதும், புதைப்பதும் ஒரே நேரத்தில் நடப்பதால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.

 மேலும், மழைக்காலங்களில் ஆற்றில் தண்ணீர் வந்தால் சடலங்களை புதைக்க முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது. தற்போது இடம் இல்லாத பற்றாக்குறையால் சடலங்களை புதைக்க முடியாமல் அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர். மேலும், கடந்த சில ஆண்டுகளாக இடுகாட்டை பயன்படுத்தப்படாமல் கிடப்பில் போட்டதால் மணல் கொள்ளை நடந்து, இடுகாடு மிகவும் சேதமடைந்து, இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது.

 இதனால் அப்பகுதி மக்கள் சடலங்களை புதைப்பதற்கு இடுகாடு இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, காணாமல் போன இடுகாட்டை மீட்டு, சாலை வசதி செய்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கடந்த 4 ஆண்டுகளாக தொகுதி எம்எல்ஏவிடம் பலமுறை கோரிக்கை மனு அளித்துள்ளனர். ஆனால் அவர் இதுசம்பந்தமாக எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் கண்டும் காணாமல் இருந்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: