மருத்துவர்களை குறிவைக்கும் உயிர்கொல்லி கொரோனா!: சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் ஒரு மருத்துவர் உயிரிழப்பு!

சென்னை: சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவர் ஒருவர் உயிரிழந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வடபழனி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 92 வயது மருத்துவர் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்தவர் மருத்துவர் ரத்னவேல் பாண்டியன். கடந்த 29ம் தேதி உடல்நல குறைவு ஏற்பட்டு வடபழனியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தொடர் சிகிச்சையில் இருந்த அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து இவரது குடும்பத்தினர் அனைவருக்குமே கொரோனா தொற்று ஏற்பட்டு அனைவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். சென்னையை பொறுத்தவரையில் கீழ்ப்பாக்கத்தில் கிளினிக் நடத்தி வந்த டாக்டர் சைமந்த், அதேபோல நுங்கப்பாக்கத்தை சேர்ந்த 76 வயது மருத்துவர், சென்னை தங்கசாலை பகுதியை சேர்ந்த மருத்துவர், அதேபோல பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் படித்துவிட்டு சென்னையில் தங்கி சிகிச்சை அளித்து வரும் 24 வயது இளம் மருத்துவர், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை சேர்ந்த மருத்துவர் என பல்வேறு மருத்துவர்கள் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்கள்.

இந்நிலையில் தற்போது 92 வயதான அரும்பாக்கத்தை சேர்ந்த மருத்துவர் இன்று உயிரிழந்துள்ளார். இதுமட்டுமின்றி மருத்துவத்துறையை சேர்ந்த ஊழியர்கள் கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். மருத்துவர்கள், மருத்துவத்துறை ஊழியர்கள் தொடர்ச்சியாக கொரோனாவுக்கு பலியாகும் சம்பவங்கள் தொடர்வதால் மருத்துவத்துறையினர் மத்தியில் பெரும் அச்சமும், பீதியும் எழுந்துள்ளது. மருத்துவர் உயிரிழப்பை தொடர்ந்து இன்று சென்னையில் 20 பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: