×

அடுத்த ஒன்றரை வருடத்தில் ஒரு லட்சம் கோடி முதலீடுகளை திரட்ட வங்கிகள் திட்டம்

புதுடெல்லி: கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தத்திலிருந்து விடுபட அடுத்த ஒன்றரை வருடத்தில் ஒரு லட்சம் கோடி முதலீடுகளை திரட்ட வங்கிகள் திட்டமிட்டுள்ளன. கொரோனா வைரஸ் பரவலால் உலக பொருளாதாரத்தில் மிகப் பெரிய சுணக்கம் ஏற்பட்டுள்ளது. பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்த இந்தியாவில் ரிசர்வ் வங்கி கொரோனாவுக்கு பின்னர் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்ததாஸ் கூறுகையில், ‘நிதி கட்டமைப்பை மேம்படுத்த முதலீடுகளை அதிகரிப்பதோடு மட்டுமல்லாது, கடன்கள் வழங்குவதையும் உறுதி செய்ய வேண்டும். தற்போது வங்கிகளில் இருக்கும் குறைந்தபட்ச முதலீடு போதுமானது அல்ல’’ என்று கூறியுள்ளார்.

வருங்காலத்தில் வங்கிகளின் வராக்கடன்கள் அதிகரிக்கவும், லாபம் குறையவும் வாய்ப்பு உள்ளது. இதனால் வங்கிகளுக்கு மிகப் பெரிய தொகை தேவைப்படுகிறது. இந்த நிதியாண்டில் (2020-21) 20 பில்லியன் டாலர் முதலீடு வங்கிகளுக்கு தேவைப்படும் என்று கிரெடிட் சுசி நிறுவனம் கணித்துள்ளது. இதற்கு முன்னதாக 10 ஆயிரம் கோடி முதல் 20 ஆயிரம் கோடி வரையே முதலீடு தேவை என்ற நிலை இருந்தது. இந்நிலையில் மத்திய அரசும் 2020-21 பட்ஜெட்டில் முதலீடுகளை அதிகரிக்க திட்டம் வகுக்கப்படாததால், பொதுத்துறை வங்கிகள் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

இதையடுத்து ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா 20 ஆயிரம் கோடியும், பஞ்சாப் நேஷனல் வங்கி 7 ஆயிரம் கோடியும், பாங்க் ஆப் பரோடா 13 ஆயிரத்து 500 கோடியும், கனரா வங்கி 6 ஆயிரம் கோடி முதல் 8 ஆயிரம் கோடி வரையிலும் திரட்ட முடிவெடுத்துள்ளன. தனியார் வங்கிகள் 75 ஆயிரம் கோடி முதல் ஒரு லட்சம் கோடி வரை திரட்ட திட்டங்கள் தீட்டியுள்ளன. யெஸ் வங்கி, ஆக்சிஸ் வங்கி மற்றும் ஐசிசிஐ வங்கி ஆகிய 3 வங்கிகளும் ஏற்கனவே  45 ஆயிரம் கோடி வரை திரட்ட திட்டங்களை வெளியிட்டுள்ளன. ஹெச்டிஎப்சி வங்கி பாண்டுகள் மூலம் 50 ஆயிரம் கோடி திரட்ட ரிசர்வ் வங்கியின் அனுமதியை பெற்றுள்ளது. கோடக் மகேந்திரா வங்கி 7,442 கோடியை திரட்டுகிறது. இவ்வாறு இந்தியாவில் உள்ள முன்னணி வங்கிகள் அனைத்தும் அடுத்த 18 மாதங்களில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி முதலீடுகளை திரட்ட திட்டங்களை தீட்டியுள்ளன.

Tags : Banks , Over the next year and a half, one lakh crore, investment, mobilization, banks, plan
× RELATED வங்கி ஊழியர்களுக்கு 17% ஊதிய உயர்வு வழங்க ஒன்றிய அரசு ஒப்புதல்