வியாபாரிகள் கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேருக்கு 2 நாள் சிபிஐ காவல்: மதுரையில் விடிய விடிய விசாரணை; இன்று சாத்தான்குளம் அழைத்து செல்கின்றனர்

மதுரை: சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கில் கைதான இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 5 போலீசாரை, 2 நாள் காவலில் விசாரிக்க மதுரை நீதிமன்றம் சிபிஐக்கு அனுமதியளித்தது. இதையடுத்து அவர்களிடம் விடிய விடிய விசாரணை நடந்தது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், இவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர், போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட வழக்கில் சிபிசிஐடி போலீசார், சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்ஐகள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 10 போலீசாரை கைது செய்தனர். இதையடுத்து வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு, இரு கொலை வழக்குகள் பதிவு செய்து கூடுதல் எஸ்பி சுக்லா தலைமையிலான சிபிஐ குழுவினர் விசாரித்து வருகின்றனர்.

மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்ஐக்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், போலீசார் முத்துராஜா மற்றும் முருகன் ஆகிய 5 பேரையும், 5 நாட்கள் காவலில்  விசாரிக்க அனுமதிக்க கோரி, சிபிஐ தரப்பில் மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி ஹேமானந்த்குமார் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதற்காக 5 பேரையும் ஆஜர்படுத்தினர். விசாரணைக்குப்பின் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், 5 பேரையும் 2 நாள் காவலில் வைத்து விசாரிக்கலாம்.

16ம் தேதி (நாளை) மாலை 5.30 மணிக்கு முன்னதாக மீண்டும் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து 5 பேரையும் சிபிஐ போலீசார் மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர். பின்னர் ஆத்திகுளம் பகுதியில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். இன்று அவர்களை சாத்தான்குளம் அழைத்து சென்று, சம்பவ இடத்தில் வைத்தே அவர்களிடம் விசாரணை நடத்தவும் சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

Related Stories: