×

சிவகங்கை அருகே பயங்கரம் ராணுவ வீரரின் தாய், மனைவி வெட்டி கொலை: 75 பவுன் நகை, பணம் கொள்ளை

காளையார்கோவில்: சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே முடுக்கூரணி கிராமத்தை சேர்ந்தவர் சந்தியாகு(67). ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மனைவி ராஜகுமாரி (60). மகன்கள் ஸ்டீபன், ஜேம்ஸ்ராஜ். இருவருக்கும் திருமணமாகிவிட்டது. ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர். ஸ்டீபன் மனைவி சினேகா (30), பெற்றோர் சென்னையில் ஓட்டல் நடத்தி வந்ததால் தலைப்பிரசவத்துக்காக அவர்களுடன் வசித்து வந்தார். கொரோனா ஊரடங்கால் ஓட்டலை மூடிவிட்டு சொந்த ஊரான இளையான்குடி அருகே கோட்டையூருக்கு பெற்றோருடன் வந்தார். அங்கு குழந்தை பிறந்த நிலையில், சில நாட்களுக்கு முன் முடுக்கூரணிக்கு வந்து மாமனார், மாமியாருடன் வசித்து வந்தார். மற்றொரு மகனான ஜேம்ஸ்ராஜ், விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இவர் காரைக்குடியில் புதிதாக வீடு கட்டுவதால் அங்கேயே தங்கி விட்டார். முடுக்கூரணியில் உள்ள வீட்டில் சந்தியாகு, ராஜகுமாரி, சினேகா மற்றும் அவரது குழந்தை மட்டுமே இருந்தனர்.

நேற்று முன்தினம் இரவு சந்தியாகு வழக்கம்போல் தோட்டத்திற்கு காவலுக்கு சென்று விட்டார். இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள், நேற்று அதிகாலை அவரது வீட்டிற்கு வந்தனர். வராண்டாவில் தூங்கிக் கொண்டிருந்த ராஜகுமாரியை தலை, கழுத்தில் சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அவர் கழுத்தில், காதில் அணிந்திருந்த நகைகளை பறித்துக்கொண்டு, வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு தூங்கிக் கொண்டிருந்த மருமகள் சினேகாவையும் சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொன்றனர். அவர் அணிந்திருந்த நகைகளையும் பறித்துக் கொண்டனர். பின்னர் வீட்டில் இருந்த பீரோக்களை உடைத்து, அதில் இருந்த 75 பவுன் நகைகள் மற்றும் பணத்தையும் கொள்ளையடித்துக் கொண்டு தப்பினர்.  

அதிகாலை 4 மணியளவில் சினேகாவின் குழந்தை தொடர்ந்து வீறிட்டு அழுது கொண்டிருந்தது. சந்தேகமடைந்த பக்கத்து வீட்டினர், சந்தியாகுவின் வீட்டிற்கு சென்று பார்த்தனர். அங்கு மாமியார் மற்றும் மருமகள் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே சந்தியாகுவுக்கு தகவல் தெரிவித்தனர். வீட்டிற்கு வந்த சந்தியாகு, மனைவி மற்றும் மருமகளின் உடல்களை கண்டு கதறி அழுதார். பின்னர் காளையார்கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து எஸ்பி வருண்குமார்(பொறுப்பு), டிஎஸ்பி அப்துல்கபூர் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடந்தது. தடயவியல் நிபுணர்கள் கைரேகை மற்றும் தடயங்களை பதிவு செய்தனர். இது குறித்து காளையார்கோவில் போலீசார் வழக்குப்பதிந்து, கொள்ளையர்களை தேடுகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : death ,soldier ,Sivagangai ,jewelery , Sivagangai, terror, soldier's mother, wife, hacked to death, 75 pound jewelery, money, robbery
× RELATED நாய் குட்டிகளுக்கு 3 மாதத்தில் தடுப்பூசி போட அறிவுறுத்தல்