×

மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு: தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

சென்னை: மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவது, தமிழகத்தில் ரூ.5 கோடியில் தொழில் தொடங்க 6 நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது, தென்மாவட்டங்களில் கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நேற்று முதல்வர் தலைமையில் நடந்த அமைச்சரவையில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி முதல் வருகிற 31ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும், தமிழகத்தில் தினசரி 4,500 பேர் பாதிக்கப்படுகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் மட்டும் அதிகளவில் கொரோனா பாதிப்பு இருந்து வந்தது.

ஆனால், தற்போது மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், தூத்துக்குடி, திருநெல்வேலி, வேலூர், திருவண்ணாமலை, கடலூர் உட்பட தென்மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தினசரி அதிகரித்து வருகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நேற்று மாலை 5 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டிடத்தின் 10வது மாடியில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், தலைமை செயலாளர் சண்முகம் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அமைச்சரவை கூட்டம் மாலை 6.15 மணி வரை நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

ஆனாலும், கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மூத்த அமைச்சர் ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து வெற்றிபெறும் மாணவ - மாணவிகள்தான் எம்பிபிஎஸ் படிப்பில் சேர முடிகிறது. குறிப்பாக, தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 12ம் வகுப்பு வரை படித்துவிட்டு நீட் தேர்வு எழுதும் மாணவ - மாணவிகள் தேர்வில் வெற்றி பெற்றாலும், அதிக மதிப்பெண் எடுக்க முடியாததால் மருத்துவம் படிக்க முடியாத நிலை உள்ளது. மத்திய அரசிடம், தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பலமுறை வலியுறுத்தியும் கண்டுகொள்ளவில்லை.

இந்த நிலையில் தமிழகத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர நடத்தப்படும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்புகளில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு, மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்தது. அவர்களுக்கு எத்தனை சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்கலாம் என்பது குறித்து ஆராய்ந்து அரசுக்கு பரிந்துரைக்க ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழுவை கடந்த மார்ச் 21ம் தேதி தமிழக அரசு அமைத்தது.

நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கலாம் என்று ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு, தனது பரிந்துரையை முதல்வரிடம் சமர்ப்பித்தது. ஆனாலும், தமிழக அரசு நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்து அதற்கான பரிந்துரையை தமிழக ஆளுநருக்கு அனுப்பி இருந்தது. இந்தநிலையில், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 1 முதல் 8ம் வகுப்பு வரை பயின்று, பிறகு அரசு பள்ளியில் படித்து தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கும் 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்து, நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு, ஒப்புதல் அளிக்கப்பட்டது. விரைவில் தமிழக ஆளுநர் இதற்கான அவசர சட்டத்தை பிறப்பிப்பார்.

இதையடுத்து நடப்பு கல்வியாண்டிலேயே, அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கப்படும். இதன்மூலம், மருத்துவ படிப்புகளில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 150க்கு மேல் உயரும்.
அதேபோன்று, தமிழகத்தில் சுமார் ரூ.5 ஆயிரம் கோடிக்கு 15 நிறுவனங்கள் தொழில் தொடங்க விருப்பம் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனங்களுக்கு ஒப்புதல் மற்றும் சலுகைகள் அளிப்பது குறித்தும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு வருகிற 31ம் தேதி வரை உள்ளது. அதற்கு பிறகு, ஆகஸ்டு 1ம் தேதி முதல் புதிய தளர்வுகள் அறிவிப்பது மற்றும் தமிழகத்தில் சென்னை தவிர பிற மாவட்டங்களில் வேகமாக பரவி வரும் கொரோனா தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடுவது, பள்ளி, கல்லூரிகளை திறப்பது உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. இவ்வாறு கூறினார்.

* 4 அமைச்சர் வரவில்லை
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், 4 அமைச்சர்கள் கலந்து கொள்ளவில்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்டு மின்சார துறை அமைச்சர் தங்கமணி, கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, உயர் கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகிய 3 பேரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் உடல்நலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது வீட்டில் ஓய்வில் இருக்கும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகமும் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. மற்ற 27 அமைச்சர்களும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

* மாவட்டங்களில் அமைச்சர்கள் குழு?
சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த சூழ்நிலையில் ஐஏஎஸ், ஐபிஎஸ், வருவாய்த்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த குழுக்கள் அமைக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, அமைச்சர்கள் ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், கே.பி.அன்பழகன், எம்ஆர்.விஜயபாஸ்கர், பாண்டியராஜன் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் கொரோனாவை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சென்னையில் தன்னார்வலர்கள் குழுவினர் அமைத்து அதன்மூலம் வீடு வீடாக சோதனை, கபசுர குடிநீர் வழங்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அதனால், தான் சென்னையில் கொரோனா பரவல் அதிகரிக்காமல் தற்போது குறைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று தற்போது கொரோனா பரவி வரும் மற்ற மாவட்டங்களில் அமைச்சர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட வேண்டும். அப்போது தான் அங்கே கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் என்று அமைச்சர்கள் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள் குழு அமைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


Tags : meeting ,government school students ,Cabinet ,Tamil Nadu , Medical, Student Admission, Government School Student, 7.5% reservation, Tamil Nadu Cabinet, Approval
× RELATED ஈரோட்டில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நீட் தேர்வு பயிற்சி நாளை நிறைவு