×

துணை முதல்வர், மாநில தலைவர் பதவியில் இருந்து சச்சின் பைலட் அதிரடி நீக்கம்: சமாதானத்தை ஏற்காததால் காங். நடவடிக்கை; ராஜஸ்தானில் கெலாட் அரசுக்கு ஆபத்து

புதுடெல்லி: ராஜஸ்தானில் பரபரப்பான அரசியல் சூழலில், மீண்டும் ஒருமுறை கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தை புறக்கணித்ததால், சச்சின் பைலட்டிடம் இருந்து துணை முதல்வர் மற்றும் மாநில தலைவர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அவரது ஆதரவாளர்களான 2 அமைச்சர்களும் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதனால், காங்கிரஸ் ஆட்சிக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசலால் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது. முதல்வர் அசோக் கெலாட், துணை முதல்வர் சச்சின் பைலட் இடையே அதிகார போட்டி ஏற்பட்டுள்ளது. சச்சின் பைலட் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் டெல்லியில் முகாமிட்டார். முதல்வர் அசோக் கெலாட் தனக்கு 100க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக தெரிவித்தார். இருவரிடையேயான பிரச்னையை தீர்த்து வைக்க கட்சியின் மூத்த தலைவர்கள் தீவிர முயற்சி எடுத்தனர்.

இதற்கிடையே, ஜெய்ப்பூரில் அசோக் கெலாட் வீட்டில் நேற்று முன்தினம் இரவு நடந்த கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அனைத்து எம்எல்ஏக்களும் கட்டாயம் பங்கேற்க வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இக்கூட்டத்தை சச்சின் பைலட் புறக்கணித்தார். இதையடுத்து, சச்சின் பைலட் தனது முடிவை மாற்றிக் கொள்ள கட்சி தலைமை அவருக்கு அவகாசம் வழங்கியது. அதன்படி, நேற்று காலை கெலாட் தலைமையில் மீண்டும் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால், இதிலும் சச்சின் பைலட் பங்கேற்கவில்லை. கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதால் அவருக்கு எதிராக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து, சச்சின் பைலட் துணை முதல்வர், மாநில காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து நேற்று அதிரடியாக நீக்கப்பட்டார். அவரோடு சேர்ந்து எம்எல்ஏக்கள் கூட்டத்தை புறக்கணித்த அவரது ஆதரவாளர்களான அமைச்சர்கள் விஷ்வேந்திர சிங், ரமேஷ் மீனா ஆகியோரும் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா அறிவித்தார். மாநில கல்வித்துறை அமைச்சர் கோவிந்த் சிங், மாநில காங்கிரசின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். இதை தொடர்ந்து, அனைத்து உறுப்பினர்களும் பேருந்து  மூலம் ஜெய்ப்பூர் ரிசார்ட்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சச்சின் பைலட் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து காங்கிரசின் பலம் சரிந்துள்ளது. இதனால், காங்கிரஸ் ஆட்சி கவிழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பெரும்பான்மையை இழந்து விட்டதால், கெலாட் அரசு சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென பாஜ தரப்பிலும், சச்சின் பைலட் தரப்பிலும் நெருக்கடி தரப்படுகிறது. இந்த பரபரப்பான சூழலில் ஆளுநரை சந்தித்த கெலாட் நேற்றிரவு அவசர அமைச்சரவை கூட்டத்தை கூட்டினார். இதில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்காவும், சோனியாவுடன் அவசர ஆலோசனை நடத்தினார். ஆனாலும், மத்திய பிரதேசத்தில் போல ராஜஸ்தானிலும் காங்கிரஸ் ஆட்சி ஊசலாடிக் கொண்டிருக்கிறது.

* போலீஸ் உஷார்
ராஜஸ்தானில் அரசியல் நெருக்கடி நிலவும் நிலையில், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு பிரச்னை ஏற்படா வண்ணம் பாதுகாப்பை பலப்படுத்த போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். பைலட் ஆதரவாளர்கள் அதிகமுள்ள பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

* உண்மை தோற்காது; பாஜவின் கைப்பாவை
பதவி பறிப்பு குறித்து சச்சின் பைலட் தனது டிவிட்டரில், ‘உண்மை தாக்கப்படலாம், ஆனால், வீழ்த்த முடியாது,’ என கூறி உள்ளார். ஆளுநரை சந்தித்த பின் முதல்வர் கெலாட் அளித்த பேட்டியில், ‘‘சச்சின் கையில் எதுவுமில்லை. பாஜவால் அவர் இயக்கப்படுகிறார். எல்லாம் பாஜ.வின் ஏற்பாடு. இன்னமும் குதிரைப்பேரம் நடப்பது கவலை அளிக்கிறது. முதல் முறையாக நாட்டின் ஜனநாயகம் பேராபத்தில் சிக்கியுள்ளது,’’ என்றார்.

* யாரு வெயிட்டு?
200 எம்எல்ஏக்களை கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவையில் பெரும்பான்மை  பலத்தை காட்ட 101 எம்எல்ஏக்கள் தேவை. கடந்த 2018 சட்டப்பேரவை தேர்தலை தொடர்ந்து காங்கிரசுக்கு 122 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தது. இதில் 107 பேர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள். 15 பேர் சுயேச்சை மற்றும் உதிரி கட்சிகளை சேர்ந்தவர்கள். நேற்று முன்தினம் வரை கெலாட்டுக்கு 106 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக கூறப்பட்டு வந்தது. ஆனால், உண்மையான அவரது பலம் 100 மட்டுமே. இதில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 90 பேர். 7 பேர் சுயேச்சைகள். 3 பேர் உதிரி கட்சியை சேர்ந்தவர்கள்.

இவர்களில் 2 எம்எல்ஏக்களை கொண்ட பாரதிய பழங்குடி கட்சியின் (பிடிபி) ஆதரவு காங்கிரசுக்கு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏற்கனவே நேற்று முன்தினம் அக்கட்சி காங்கிரசுக்கு தனது ஆதரவை விலக்கிக் கொண்டது. கெலாட்டுக்கோ, பைலட்டுக்கோ தங்கள் ஆதரவில்லை என்றும் அறிவித்துள்ளது. சச்சின் பைலட்டும் பாஜ.வில் இணைவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அவருக்கு 20 எம்எல்ஏக்கள் (காங். 17, சுயேச்சை 3) ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது.
200 எம்எல்ஏக்களை கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவையில் பெரும்பான்மை பலத்தை காட்ட 101 எம்எல்ஏக்கள் தேவை. கடந்த 2018 சட்டப்பேரவை தேர்தலை தொடர்ந்து காங்கிரசுக்கு 122 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தது. இதில் 107 பேர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள். 15 பேர் சுயேச்சை மற்றும் உதிரி கட்சிகளை சேர்ந்தவர்கள்.

நேற்று முன்தினம் வரை கெலாட்டுக்கு 106 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக கூறப்பட்டு வந்தது. ஆனால், உண்மையான அவரது பலம் 100 மட்டுமே. இதில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 90 பேர். 7 பேர் சுயேச்சைகள். 3 பேர் உதிரி கட்சியை சேர்ந்தவர்கள். இவர்களில் 2 எம்எல்ஏக்களை கொண்ட பாரதிய பழங்குடி கட்சியின் (பிடிபி) ஆதரவு காங்கிரசுக்கு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏற்கனவே நேற்று முன்தினம் அக்கட்சி காங்கிரசுக்கு தனது ஆதரவை விலக்கிக் கொண்டது. கெலாட்டுக்கோ, பைலட்டுக்கோ தங்கள் ஆதரவில்லை என்றும் அறிவித்துள்ளது. சச்சின் பைலட்டும் பாஜ.வில் இணைவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அவருக்கு 20 எம்எல்ஏக்கள் (காங். 17, சுயேச்சை 3) ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது.

Tags : Deputy Chief Minister ,state ,Sachin Pilot ,Rajasthan , Deputy Chief Minister, State President post, Sachin Pilot, sacked, Cong. Action; Rajasthan, Government of Kerala, Danger
× RELATED ஆளுநர் பதவியை விட சுயமரியாதையே...