×

`அட்மிட்’ அதிகம்-டிஸ்சார்ஜ் குறைவு; கோவிட்கேர் சென்டரில் நிரம்பி வழியும் `கொரோனா’ வார்டுகள்: பத்தமடை தனியார் மருத்துவமனையில் நோயாளிகளை அனுமதிக்க ஏற்பாடு

நெல்லை: கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக நெல்லை மாவட்ட அரசு மருத்துவமனைகளில் வார்டுகள் நிரம்பி வழிகின்றன. இதையடுத்து இன்று முதல் பத்தமடையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் கொரோனா நோயாளிகளை அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில்  கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு நோயாளி கள் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. சராசரியாக நாள் தோறும் 100க்கும் மேற்பட்டோர் நோய் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இதில் 50 முதல் 60 சதவீதம் பேர் மாநகராட்சி பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர்.

இன்றைய நிலவரப்படி நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் மட்டும் சுமார் 600 பேர் கொரோனா பாதிப்பு மற்றும் கொரோனா அறிகுறியுடன் பல்வேறு வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த மருத்துவமனையில் படுக்கைகள் நிரம்பி வருவதால் நெல்லை அரசு சித்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் (கோவிட்கேர் சென்டர்) 80 பேரும் மூன்றடைப்பு மற்றும் கூடங்குளம் அரசு மருத்துவமனைகளில் 100க்கும் மேற்பட்டவர்களும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த மருத்துவமனைகளில் உள்ள கொரோனா வார்டுகளும் நிரம்பி விட்டதால் நெல்லையில் உள்ள 2 தனியார் மருத்துவமனைகளிலும் நோயாளிகள் காத்திருக்கும் அளவுக்கு நிரம்பி வழிகிறது.

இதன் காரணமாக புதிதாக சிகிச்சைக்கு சேருபவர்களுக்கு உடனடியாக படுக்கைவசதி அளித்து அனுமதிப்பதில் கடந்த 2 நாட்களாக சிக்கல் ஏற்பட்டுள்ளது. நெல்லை அரசு மருத்துவமனைக்கு நேற்று நள்ளிரவு அழைத்துவரப்பட்ட சுமார் 20 நோயாளிகள் படுக்கை கிடைக்காமல் கொரோனா தனிமை வார்டுக்கு வெளியே தரையில் அமர வைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் சிலர் சோர்வுற்று அங்கேயே படுத்து ஓய்வெடுத்தனர். நீண்டநேர போராட்டத்திற்குபின் நெல்லை அரசு மருத்துவகல்லூரி மற்றும் பாளை அரசு சித்த மருத்துவகல்லூரி மருத்துவமனைகளுக்கு நோயாளிகள் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டனர்.  

நோயாளிகள் அங்கு வார்டுக்கு சென்ற பின்னரும் இன்று காலைவரை படுக்கை கிடைக்காமல் வார்டுகளில் தரையில் அமர்ந்து இருக்கும் நிலை ஏற்பட்டது. ஒவ்வொரு நாளும் சராசரியாக நோயாளிகள்  100 பேர் சேரும்போது ஒவ்வொரு நாளும் 50 முதல் 60 பேர் வரை என்ற நிலையிலே டிஸ்சார்ஜ் செய்யப்படுகின்றனர். இந்த சூழ்நிலையில் பத்தமடையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் இன்று முதல் (ஜூலை14) கொரோனா நோயாளிகளை சிகிச்சைக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. நாள்தோறும் கொரோனா பாதிப்பு நோயாளி எண்ணிக்கையை பார்க்கும்போது இதுவும் போதுமானதாக இருக்குமா? என்று தெரியவில்லை.

எனவே பெரிய அரங்கு போன்ற வசதி உள்ள இடங்களை கொரோனா நோயாளிகளுக்கு  பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Corona ,Govtcare Center ,Pathamada Private Hospital ,Govt Care Center , Wards of `Admit, Discharge, Govt Care Center, Corona '
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...