காங்கிரஸ் எம்.எல்.ஏ. தனவேலு பதவி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம்!: பேரவை தலைவர், தேர்தல் ஆணையம் பதிலளிக்க ஐகோர்ட் ஆணை!!!

சென்னை: புதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ. தனவேலு பதவி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் 4 வாரத்தில் பதிலளிக்க புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பாகூர் எம்.எல்.ஏ.ஆக இருந்த தனவேலு கடந்த 2016ம் ஆண்டு தொடங்கி கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல்லெறிந்து வந்தவராவார்.

கட்சிக்கும், அரசுக்கும் எதிராக தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வந்ததால் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் கடந்த 10ம் தேதி அவரது எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பாகூர் தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனை எதிர்த்து தனவேலு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பதவி பறிப்பு உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் எந்த முடிவும் எடுக்கக்கூடாது என்றும் தனவேலு மனுவில் கோரிக்கைவிடுத்திருந்தார்.

தனது மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத ஒன்று என்று தனது மனுவில் அவர் கூறியிருந்தார். ஆனால் புதுவை சபாநாயகர் சிவக்கொழுந்து சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பாகூர் தொகுதியை தேர்தல் ஆணையம் காலியாக அறிவித்துவிட்டதால் இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க தேவையில்லை என்று குறிப்பிட்டார். அவரது வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் இதுகுறித்து 4 வாரத்தில் பதிலளிக்க சட்டப்பேரவை தலைவர் மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு ஆணையிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.

Related Stories: