×

கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளை தனி கவனம் செலுத்தி பாதுகாக்க வேண்டியது அரசு அதிகாரிகளின் கடமை: சென்னை உயர்நீதிமன்றம் கருத்து

சென்னை: சென்னை ஆலந்துாரைச் சேர்ந்தவர் ஆதிகேசவன( 72), கடந்த மாதம் 11ம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டார். சுகாதாரத்துறை அதிகாரிகள் இவரை ஆம்புலன்சில் கிண்டி ஸ்கிரீனிங் சென்டர் அனுப்பினர். அங்கு, மேல் பரிசோதனை செய்யப்பட்டது. முடிவில், அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்ப, மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். பகல், 12 மணிக்கு, ஆம்புலன்சில் கீழ்ப்பாக்கம் அனுப்பினர். அவரது பரிசோதனை முடிவுகள், பரிந்துரை, சிகிச்சை குறித்த ஆவணங்களை, ஆம்புலன்ஸ் ஓட்டுனரிடம் கொடுத்தனர். உறவினர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவமனையை தொடர்பு கொண்டபோது, அவரை அங்கு அனுமதிக்கவில்லை என தெரிந்தது.

ஆதிகேசவனிடம், உறவினர்கள் மொபைல் போன் கொடுத்து அனுப்பாததால், அவர் எங்கு இருக்கிறார் என சுகாதாரத்துறை அதிகாரிகளால் தெரிந்துகொள்ள முடியவில்லை. இந்நிலையில், 23ம் தேதி ஆதிகேசவனின் மகன் மணிவண்ணன், கீழ்ப்பாக்கம், அரசு மருத்துவமனை சென்ற எனது தந்தை காணவில்லை; மீட்டு தர வேண்டும், என கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் சேர்ந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் , கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் இடம் இல்லாததால், அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பியதாக மருத்துவமனை ஆவணங்களில் பதிவு இருந்துள்ளது தெரியவந்தது.

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையிலும், அவர் இல்லையென தெரிந்தது. அங்குள்ள ஆவணங்களிலும், அவர் பெயர் பதிவாகவில்லை. இதர அரசு மருத்துவமனைகள், பிணவறைகளில் அவரை தேடினர். எங்கும் கிடைக்கவில்லை. இந்நிலையில், சில தினங்களுக்கு முன், கீழ்ப்பாக்கம் போலீசார் அரசு பொது மருத்துவமனை கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது,  ஜூன் 11ம் தேதி மதியம் 1  மணிக்கு, கொரோனா வார்டு அருகில் ஆதிகேசவன் நிற்பதும், இரவு 8:30 மணிக்கு மருத்துவமனை வளாகத்தில் இருந்து வெளியேறுவதும், கேமராவில் பதிவாகி இருந்தது.


இந்நிலையில், ஆதிகேசவனின் இன்னொரு மகன், காணாமல் போன தனது தந்தையை மீட்டுத்தரகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்தபோது, முதியவர் மாயமான விவகாரம் தொடர்பாக பூக்கடை காவல் நிலைய ஆய்வாளர் நாளை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளை தனி கவனம் செலுத்தி பாதுகாக்க வேண்டியது அரசு அதிகாரிகளின் கடமை என நீதிபதிகள் கருது தெரிவித்துள்ளனர்.


Tags : government ,Chennai High Court , Corona, Elder, Chennai High Court
× RELATED சட்டமன்ற நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு;...